ஈராக் – சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் 31,500 தீவிரவாதிகள்ஈராக் – சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்-ல் 31,500 தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் ஐஎஸ் அமைப்பில் 31,500 தீவிரவாதிகள் உள்ளதாக அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு தெரிவித்தது. இந்த தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போருக்கு 10 அரபு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

ஈராக் அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் ஐஎஸ் தீவிரவாதிகளின் மீது வான்வழி தாக்குதல் நட்ததி வருகிறது. இதேபோல், சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிரான போராட்டத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் புகுந்து, இருதரப்பிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில், சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் 31,500 பேர் உள்ளதாகவும், அவர்கள் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்றும், மேலும் அந்த அமைப்பில் யாரும் சேர விடாமல் தடுப்பதுடன் அவர்களின் செயல்பாட்டை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பு வாஷிங்டனில் அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சவுதி அரேபியா, எகிப்து, ஈராக், ஜோர்டான் உள்ளிட்ட 10 நாட்டு தலைவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஈராக் மற்றும் சிரியாவில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை தற்போது தடுக்க தவறினால், பல்வேறு நாடுகளிலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தொடரும். தற்போது ஆயிரக்கணக்கில் உள்ள தீவிரவாதிகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கில் அதிகரித்து விடும் என்றும் ஜான் கெர்ரி கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க தாக்குதலுக்கு சவுதி அரேபியா உள்ளிட்ட 10 அரபு நாட்டு தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், ஈராக்குக்கு வெளியே உள்ள விமானப்படை தளத்திலிருந்து மிக விரைவில் அமெரிக்க விமானப்படையின் தாக்குதல் துவங்கும் என்று அமெரிக்க ராணுவ தலைமை மயகமான பென்டகன் அறிவித்ததுள்ளது.

ஆசிரியர்