பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள வசிரிஸ்தான் பகுதி அல் கொய்தா மற்றும் தலீபான் தீவிரவாதிகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. பாகிஸ்தானின் 7 பழங்குடியின மாவட்டங்கள் இந்த பகுதியில் உள்ளது. பெஷாவரில் பள்ளிக்குழந்தைகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தட்டக்கல் என்ற இடத்தில் தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறி வைத்து போர் விமானங்கள் மூலமாக நேற்று தாக்குதல் நடத்தியது. இதில் சில முக்கிய தளபதிகள் உள்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
பூமிக்கு அடியில் வெடிபொருட்கள் வைத்து இருந்த பெரிய சுரங்க அமைப்பையும் தகர்த்து உள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்து உள்ளது.