Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் விவசாயியாக இருந்து அதிபர் ஆன சிறீசேனாவிவசாயியாக இருந்து அதிபர் ஆன சிறீசேனா

விவசாயியாக இருந்து அதிபர் ஆன சிறீசேனாவிவசாயியாக இருந்து அதிபர் ஆன சிறீசேனா

2 minutes read

பள்ளிவெட்டி கமரலலகே மைத்ரிபால யப்பா சிறீசேனா என்ற மைத்ரிபால சிறீசேனா, இலங்கையின் வட மத்திய மாகாணத்தின் பொலோன்னருவா மாவட்டத்தில் கடந்த 1951-ம் ஆண்டு செப்டம்பர் 3-ந் தேதி பிறந்தார்.

பொலோன்னருவாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த சிறீசேனா, 3 ஆண்டு விவசாய பட்டப்படிப்பை குண்டசேலில் நிறைவு செய்தார். 1980-ம் ஆண்டில் ரஷியாவில் உள்ள மேக்சிம் கோர்க்கி இலக்கிய நிறுவனத்தில் இருந்து அரசியல் அறிவியல் படிப்பில் டிப்ளமோ பட்டமும் பெற்றுள்ளார்.

இவர்களின் குடும்பம் விவசாய பின்னணியை கொண்டது. அதன்படி சிறீசேனாவும் படிப்பை முடித்து விவசாய தொழிலில் ஈடுபட்டார். பின்னர் அவரின் பார்வை அரசியல் பக்கம் திரும்பியது.

இளமைப்பருவத்தில் கம்யூனிசத்தில் ஈடுபாடு கொண்டிருந்த சிறீசேனா, 1967-ம் ஆண்டு இலங்கை சுதந்திரா கட்சியின் இளைஞர் பிரிவில் சேர்ந்தார். தீவிர அரசியலுக்கு வருமுன் அவர் அங்குள்ள கூட்டுறவு சங்கத்திலும், கிராம நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.

1971-ம் ஆண்டு இலங்கையில் நிகழ்ந்த ஜனதா விமுக்தி பெரமுனா கலகத்தின் போது, அரசுக்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சிறீசேனா, சுமார் 2 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

சிறையில் இருந்து விடுதலையான பின் சுதந்திரா கட்சியின் பல்வேறு பிரிவுகளில் தீவிரமாக பணியாற்றி படிப்படியாக உயர்ந்த சிறீசேனா, 1981-ல் அக்கட்சியின் பொலிட்பீரோவில் இடம் பிடித்தார். பின்னர் 1983-ல் இலங்கை சுதந்திரா கட்சியின் இளைஞர் பிரிவின் தேசிய தலைவரானார்.

1989-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சுதந்திரா கட்சி சார்பில் பொலோன்னருவா மாவட்டத்தில் போட்டியிட்ட சிறீசேனா, அதில் வெற்றி பெற்று தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் 1994-ல் நடந்த தேர்தலில் அவர் மீண்டும் வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த முறை அவர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்களின் முன்னணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது நீர்வளத்துறை துணை மந்திரியாக நியமிக்கப்பட்ட அவர், 1997-ம் ஆண்டு கேபினட் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

2000-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடந்த சுதந்திரா கட்சி தேர்தலில் தேசிய பொதுச் செயலாளர் பதவிக்கு சிறீசேனா போட்டியிட்டார். ஆனால் அவரை எஸ்.பி.திசநாயகே தோற்கடித்தார். எனினும் அவர் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2001-ம் ஆண்டிலேயே அவர் கட்சியின் தேசிய பொதுச் செயலாளரானார்.

அந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிறீசேனா வெற்றி பெற்றாலும், மக்களின் கூட்டணி கட்சி தோல்வியை தழுவியதால், அவரது மந்திரி பதவி பறிபோனது.

2004-ம் ஆண்டு ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியுடன் சுதந்திரா கட்சி கூட்டணி வைத்து, ஐக்கிய மக்கள் விடுதலை கூட்டணி என்ற புதிய கூட்டணி உருவானது. அப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிறீசேனா வெற்றி பெற்றார். அப்போதும் அதிபர் குமாரதுங்காவின் அமைச்சரவையில் சிறீசேனா இடம் பெற்றிருந்தார்.

மேலும் அப்போது அவர் அவைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டார். எனினும் 2005-ம் ஆண்டு அந்த பதவியை சிறீசேனா ராஜினாமா செய்தார்.

2005-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சே, சிறீசேனாவை விவசாயம், சுற்றுச்சூழல், நீர்ப்பாசனத்துறை மந்திரியாக நியமித்தார். 2010-ம் ஆண்டு நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்ற அவர், சுகாதாரத்துறை மந்திரியாக பணியாற்றினார். இதற்கிடையே நாட்டின் ராணுவ மந்திரி பதவியையும் பல நேரங்களில் வகித்துள்ளார்.

இவரை கொலை செய்ய விடுதலைப்புலிகள் பலமுறை முயன்றுள்ளதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார். கொழும்பில் கடந்த 2008-ம் ஆண்டு இவர் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகன அணிவகுப்பு மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை சுகாதாரத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்த சிறீசேனா, ராஜபக்சேவின் குடும்ப அரசியல் மற்றும் சர்வாதிகாரத்தன்மையை எதிர்த்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து அதிபர் தேர்தலில் சிறீசேனாவை பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் அறிவித்தன. மேலும் முன்னாள் அதிபர் சந்திரிகா, தமிழர் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சிறீசேனாவை ஆதரித்தன.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், அதிபரின் அதிகபட்ச அதிகாரங்களை 100 நாட்களுக்குள் குறைப்பேன் என்று வாக்களித்து இருந்தார். மேலும் சர்ச்சைக்குரிய 18-வது திருத்தத்தை தள்ளுபடி செய்தல், ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

விவசாய பின்புலத்தை கொண்ட சிறீசேனாவை கிராமப்புற மக்கள் வெகுவாக ஆதரித்தனர். மேலும் அவரை ஆதரித்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நகர்ப்புறங்களில் மிகுந்த செல்வாக்குடன் உள்ளது. இந்த அம்சங்கள் சிறீசேனாவை அதிபர் அரியணையில் அமர்த்த முழுக்காரணமாக அமைந்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More