June 8, 2023 5:24 am

இலங்கையில் ராஜபக்சே வீழ்ச்சியை தொடர்ந்து காட்சிகள் மாறுகின்றன இலங்கையில் ராஜபக்சே வீழ்ச்சியை தொடர்ந்து காட்சிகள் மாறுகின்றன

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

இலங்கையில் ராஜபக்சே வீழ்ச்சியை தொடர்ந்து காட்சிகள் மாறுகின்றன. போரினால் பாதித்த வடக்கு மாகாணத்தில் வெளிநாட்டினருக்கு விதிக்கப்பட்ட பயண தடை நீக்கப்பட்டது. ராணுவத்தின் செயல்பாடு குறித்து அறிக்கை அளிக்க அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

ராஜபக்சே விதித்த தடை

இலங்கையில் உள்நாட்டுப்போரின் இறுதிக்கட்டத்தில், அப்பாவித்தமிழ் மக்கள் கூட்டம், கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டதுடன், உலகில் வேறெங்கும் நடந்திராத அளவுக்கு மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரங்கேறின.

இது தொடர்பாக ஐ.நா. சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணையை முந்தைய அதிபர் ராஜபக்சே நிராகரித்தார். அத்துடன், உள்நாட்டுப்போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாட்டின் வடக்கு பகுதிக்கு வெளிநாட்டவர் செல்வதற்கு கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி பயணத் தடையும் விதித்தார்.

காட்சிகள் மாற்றம்

இப்போது சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். எதிர் அணி வேட்பாளர் சிறிசேனா அமோக வெற்றி பெற்றார். தமிழர்களின் ஏகோபித்த ஆதரவினால்தான் அவரால் அபார வெற்றி பெற முடிந்தது.

ராஜபக்சேயின் வீழ்ச்சியை தொடங்கி, இலங்கையில் காட்சிகள் மாறத்தொடங்கி உள்ளன.

பயண தடை நீக்கம்

இந்த நிலையில் கொழும்பு நகரில் புதிய அதிபர் சிறிசேனா தலைமையில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்தது.

இந்தக் கூட்டத்தில், இலங்கையின் வடக்கு பகுதியில் வெளிநாட்டவருக்கு விதிக்கப்பட்டிருந்த பயண தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இது தொடர்பாக ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரியா விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ‘‘ நாட்டில் மோதல் சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது. சகஜ நிலை திரும்பி உள்ளது. எனவே நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் வெளிநாட்டினர் பயணம் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை, தளர்த்தப்படுகிறது’’ என கூறி உள்ளார்.

இதற்கிடையே வடக்கு மாகாணத்தில் கவர்னராக இருந்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரியை இலங்கை அரசு நீக்கி விட்டு, முன்னாள் தூதரக அதிகாரியை அந்தப் பொறுப்பில் அமர்த்தி உள்ளது.

ராணுவ செயல்பாடு எப்படி?

வடக்கு மாகாணத்தில் ராணுவத்தின் செயல்பாடு குறித்து அறிக்கை அளிக்குமாறு, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் பஸ்நாயக்காவிற்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், முகாம்களின் எண்ணிக்கை, ராணுவத்தினர் மேற்கொண்டு வருகிற பணிகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக அறிக்கையில் தெரிவிக்கும்படி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்