அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நாட்டின் டாலர் கரன்சி நோட்டுகளில் பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருக்கிறது.
அமெரிக்க டாலர் நோட்டுகளில் இதுவரை ஆண் தலைவர்களின் உருவங்கள் மட்டுமே இடம் பெற்று வந்த நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டு அச்சிடப்படவிருக்கும் 10 டாலர் நோட்டுகளில் புகழ்பெற்ற பெண் ஒருவரின் உருவத்தை அச்சிட அந்த நாட்டு நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டதன் 100-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அந்த 10 டாலர் நோட்டு வெளியிடப்படவுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சர் ஜேக்கப் லியூ கூறியதாவது:
அமெரிக்க டாலர் நோட்டுகள், நாட்டின் பெருமையைப் பிரதிபலிப்பதாக உள்ளன.
முக்கியத் தலைவர்களின் உருவங்களைத் தாங்கி வந்த அந்த நோட்டுகளில் இதுவரை மிக அரிதாகத்தான் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் 10 டாலர் நோட்டில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது.
அதில், முதல் முறையாக பெண் ஒருவரின் உருவம் இடம் பெறவிருப்பது பெருமைக்குரியது.
அந்த டாலர் நோட்டில் யாருடைய உருவத்தை அச்சிடுவது என்பது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
1