இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டை கடந்த 2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள சாவக்கச்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தற்கொலைப்படை உடை, வெடிமருந்துகள், துப்பாக்கிகள், பேட்டரிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதாக இலங்கை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து இலங்கை ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்துகளால் நாட்டுக்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு எதிரான சண்டைக்கு பிறகு இது போன்று வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்படுவது அவ்வப்போது நடைபெறும் சம்பவம் தான். இந்த ஆயுதங்கள் அனைத்தும் சண்டையின் போது விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்திருக்கலாம். இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரை தேடி வருகிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.