வட கொரியாவின் ராணுவ உளவுக் கண்காணிப்புப் பிரிவில் பணியாற்றிய உயரதிகாரி, அந்த நாட்டியிலிருந்து வெளியேறி தென் கொரியாவின் பக்கம் இணைந்தார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
சீன உணவகத்தில் பணியாற்றி வந்த 13 வட கொரியர்கள், தென் கொரியாவில் தஞ்சமடைந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், வட கொரிய ராணுவத் தளபதி ஒருவர், அந்த நாட்டிலிருந்து வெளியேறி தென் கொரியாவின் பக்கம் இணைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வட கொரிய ராணுவத்தின் உளவுக் கண்காணிப்புப் பிரிவில் அவர் பணியாற்றியதாக, தென் கொரிய பாதுகாப்புத் துறையும், ஒருங்கிணைப்புத் துறையும் தெரிவித்தது. எனினும், அந்த உயரதிகாரி குறித்த விவரங்கள், அவர் வட கொரியாவிலிருந்து வெளியேறியதன் நோக்கம் போன்ற விவரங்களை வெளியிட இரு துறைகளும் மறுத்துவிட்டன.
கடந்த 2011-ஆம் ஆண்டு வட கொரிய அதிபராக கிம் ஜோங் உன் பதவியேற்ற பிறகு, வட கொரிய ராணுவ வீரர்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி தென் கொரியா பக்கம் இணைந்ததாக அவ்வப்போது செய்திகள் வருவதுண்டு. எனினும், ராணுவ உயரதிகாரி ஒருவர் அவ்வாறு இணைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
2010-ஆம் ஆண்டு 50 தென் கொரியர்கள் உயிரிழக்கக் காரணமான பீரங்கித் தாக்குதலுக்கு, வட கொரிய ராணுவத்தின் உளவுக் கண்காணிப்புப் பிரிவே காரணம் என்று கூறப்படுகிறது.
1