சிரியா நாடாளுமன்றத்துக்கு கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் அதிபர் அல்-அஸுதின் பாத் இயக்கக் கட்சி தலைமையிலான கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தல் முடிவுகளை சிரியாவின் தேசிய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை இரவு அறிவித்தது.
நாடாளுமன்றத்தின் 250 இடங்களுக்கு கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. அந்நாட்டிலுள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையான 88.34 லட்சம் பேரில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலில் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் முன்னெப்போதையும் விட அதிக எண்ணிக்கையாக 11,341 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோதிலும், இறுதியில் சுமார் 3,500 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர்.
அதிபர் பஷார் அல்-அஸுத் தலைமையிலான தேசிய ஒற்றுமை கூட்டணி 200 இடங்களில் வெற்றி பெற்றது.
சிரியாவில் மூன்றிலொரு பகுதி இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் நடைபெற்ற இந்தத் தேர்தலை ரஷியா அங்கீகரிக்க சம்மதித்த போதிலும், ஐ.நா. இதனை இதுவரை அங்கீகரிக்கவில்லை.