தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில், சமீபத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 413 ஆக உயர்ந்தது; அதே நேரத்தில், பலர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.
ஈக்வடாரில், சமீபத்தில், 7.8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ஆறு மாகாணங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. பாலங்கள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கத்தால், 413 பேர் உயிரிழந்துள்ளனர்; 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதற்கிடையே, பல்வேறு இடங்களில், கட்டட இடிபாடுகளில் இருந்து, சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்புப் படையினருடன் இணைந்து, உள்ளூர் மக்களும், காணாமல் போனவர்களின் உறவினர்களும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. ”பல்வேறு மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இயல்பு நிலைக்கு திரும்ப நீண்டகாலமாகும்,” என, ஈக்வடார் அதிபர் ரபேல் கோர்ரியா கூறியுள்ளார்.
ஈக்வடாரில், 67 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இது. கடந்த, 1949ம் ஆண்டில், அம்பாடோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், 5,000 பேர் பலியாயினர்.