இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலைக்குரியதாக இருப்பதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் பல்வேறு போர்க்குற்றங்கள் நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று மைத்ரிபாலா சிறீசேனா அதிபரானார். இதனைத் தொடர்ந்து, போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தச் சூழலில், இலங்கையில் மனித உரிமை நிலவரம் குறித்து அமெரிக்கா அண்மையில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டது.
அதில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இருந்தபோதிலும், சித்ரவதை, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களை மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எழுப்பி வருவதாகவும், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிலைமை இன்னும் சீரடையவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரிட்டன் கவலை: இந்நிலையில், இந்த அறிக்கை குறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இலங்கையில் மனித உரிமை நிலவரங்கள் குறித்து அமெரிக்கா அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கவலையளிப்பதாக உள்ளன. மனித உரிமையைப் பாதுகாப்பதில் இலங்கை அரசு இனி தீவிர கவனம் செலுத்தும் என நம்புகிறோம். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தவும், மனித உரிமைகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளுக்கு உதவியாக பிரிட்டன் பிரதமர் ரூ.62 கோடி அளிப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது