சவுதி அரேபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் ஆதரவாளர்கள் மூலம் பல்வேறு தாக்குதல்கள் நடத்தி உள்ளனர். இதனால், தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது. ஆங்காங்கே போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த வாரம் ஆசிர் பிராந்தியத்தில் நடந்த அதிரடி நடவடிக்கையின்போது தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து வெடிகுண்டுகள் நிரப்பிய கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் மிகப்பெரிய தாககுதல் சதி முறியடிக்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், மெக்கா அருகே ஒரு வீட்டில் முகாமிட்டிருந்த ஐ.எஸ். தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பல மணி நேரம் நடந்த இந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் ஜெட்டாவில் நடந்த சோதனைகளில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.