ரோபோ எனப்படும் எந்திர மனிதனின் திறமை பல துறைகளிலும் பளிச்சிட்டு வருகிறது. ஓட்டல்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றி வருகிறது. இந்த நிலையில் மாணவர்களுடன் இணைந்து தேர்வு எழுதும் திறனுடன் புதிய வகை ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோவை செங்டுவில் உள்ள ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. சீனாவில் பிளஸ் -2 முடித்த மாணவ, மணணவிகள் கல்லூரிகளில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
அந்த தேர்வு எழுதும் வகையில் மிகவும் அறிவு சார்ந்த தொழில் நுட்பத்துடன் இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. இது கணிதம், சீனமொழி மற்றும் வரலாறு, புவியியல் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளிக்கும் திறன், படைத்தது. இது உரிய நேரத்தில் தேர்வு எழுதி முடிக்கும் திறன் படைத்தது.
தேர்வு எழுதும் போது பிரிண்டருடன் இந்த ரோபோ இணைக்கப்படும். ரோபோவின் புரோகிராமில் எலெக்ட்ரானிக் தேர்வு தாள் இணைக்கப்படும். தேர்வின் போது இன்டர்நெட்டுடன் ஆன இதன் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும். இருந்தும் இந்த ரோபோ தனது சொந்த அறிவால் தேர்வு முழுவதையும் சிறப்பாக எழுதும்.
அதற்கான பரிசோதனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. தற்போது நுழைவு தேர்வு எழுத அது தயாராக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் நுழைவுத் தேர்வில் மாணவர்களுடன் சேர்ந்து இந்த அதிசய ரோபோவும் பரீட்சை எழுத உள்ளது. இந்த தகவலை செங்டூவில் உள்ள ரோபோ தயாரிப்பு நிறுவன தலைமை அதிகாரி வின் ஹியூ தெரிவித்துள்ளார்.