மூன்று ஆண்டுகளுக்கு முன், அல் – குவைதா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானியின் மகன், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் படையினரால் மீட்கப்பட்டார்.பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர், யூசுப் ராசா கிலானி. இவருடைய மகன், அலி ஹைதர் கிலானி, 30, கடந்த 2013ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், அல் – குவைதா பயங்கரவாதிகளால், அவர் கடத்தப்பட்டார்.
பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அவரை மீட்க முடியாமல், பாகிஸ்தான் அரசு திணறியது. இதற்கிடையே, ஹைதரை விடுதலை செய்ய, 200 கோடி ரூபாயை பயங்கரவாதிகள் கேட்டனர். பின், 50 கோடி ரூபாய் கேட்டு, முன்னாள் பிரதமரை மிரட்டினர்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானின் கூட்டுப் படையினர், ஆப்கானிஸ்தானின் காஸ்னி பகுதியில் நடத்திய அதிரடி வேட்டையின்போது, ஹைதர் மீட்கப்பட்டார். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் அரசு, பாகிஸ்தான் அரசுக்கு தெரிவித்துள்ளது.
ஹைதருக்கு, ஆப்கானிஸ்தானில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ‘விரைவில் அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்’ என, ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.