அணு ஆயுத சோதனைகள் நடத்தி வருகிற வடகொரியாவுடன் நேருக்கு நேர் பேசத்தயார் என அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் கூறினார். இது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலக நாடுகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும், ஐ.நா. சபை மற்றும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு இடையிலும் வடகொரியா அணு ஆயுத சோதனைகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது.
தனது சுய பாதுகாப்புக்காகத்தான் அணு ஆயுத சோதனையை தொடர்வதாக அந்த நாடு நியாயப்படுத்தி வருகிறது.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவை வடகொரியா பரம எதிரியாக பார்க்கிற நிலையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–
நான் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னுடன் பேசுவேன். அவருடன் பேசுவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. வடகொரியாவுடன் நேருக்கு நேர் பேசுவேன். வடகொரியாவின் ஒரே நட்பு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற சீனாவுக்கும் நிர்ப்பந்தம் கொடுப்பேன்.
சீனாவுக்கு ஏராளமான நிர்ப்பந்தம் கொடுப்பேன். இதை நான் கூறுவதற்கு காரணம், சீனாவை விட நாம் பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறோம். மக்கள் அதை உணரவில்லை.
டிரம்பின் இந்த பேட்டி அமெரிக்காவில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிம் ஜாங் அன்னுடன் நேருக்கு நேர் பேசுவேன் என்று கூறியுள்ள டொனால்டு டிரம்பின் வினோத ஆசையை அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்க உள்ள ஹிலாரி கிளிண்டன் கடுமையாக விமர்சித்தார்.
இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ‘‘டிரம்பின் வெளிநாட்டு கொள்கை அர்த்தமற்றது’’ என கூறினார்.
இதற்கிடையே ‘பாக்ஸ் நியூஸ்’ செய்தி சேனலுக்கு டிரம்ப் அளித்த மற்றொரு பேட்டியில், ‘‘ஜனாதிபதி தேர்தலில் கடந்த 9 மாதங்கள் நான் நடத்தி வந்த பிரசாரம் எனக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அப்படி ஒரு பிரசாரத்தை நான் நடத்தி இருக்காவிட்டால், இந்த அளவுக்கு வெற்றி கண்டிருக்க முடியாது’’ என குறிப்பிட்டார்.
இன்னொரு பக்கம், ‘‘நான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், இங்கிலாந்துடன் நல்ல நட்புறவு கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை’’ என டிரம்ப் கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறினார்.