தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அடுத்த முதல்வராக அமரப்போவது யார்? என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும்.
2016-தமிழக சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு 6 முனை போட்டி நிலவியது. ஆட்சியை தக்க வைத்து கொள்ள அ.தி.மு.க.வும், ஆட்சியை கைப்பற்ற தி.மு.க.வும் கடும் பிரசாரத்தை மேற்கொண்டன.
தே.மு.தி.க.–மக்கள்நல கூட்டணி–த.மா.கா. அணியினரும், பா.ஜ.க. பா.ம.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டன.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16-ந்தேதி நடைபெற்றது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா பிரச்சினை காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால், மீதம் உள்ள 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின. 4 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 674 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்தனர்.