இலங்கையில் கொட்டித்தீர்த்த கனமழையை தொடர்ந்து, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்துள்ளது. மூன்று கிராமங்களை சேர்ந்த, 200 வீடுகள், மண்ணில் புதையுண்டதில், ஏராளமானோர் உயிரிழந்திருக்க கூடும் என, அஞ்சப்படுகிறது. வங்கக் கடலில் உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இலங்கையில், சிங்களர்கள் அதிகமாக வசிக்கும் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில், பலத்த மழை பெய்தது. அங்கு, 22 மாவட்டங்களில், மூன்று நாட்களில், சராசரியாக, 20 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.
கனமழையை தொடர்ந்து, பல மாவட்டங்களில், தற்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேகாலே மாவட்டம், மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு, ஸ்ரீபுரா, பாலேபேகே உள்ளிட்ட, மூன்று கிராமங்களில், மிக மோசமான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில், 200 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இதில், ஏராளமானோர் மண்ணில் புதையுண்டு பலியாகி இருக்க கூடும் என, அஞ்சப்படுகிறது.
அந்த பகுதியில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
மழை வெள்ளத்தில் சிக்கி, 40 பேர் உயிரிழந்துள்ளதாக, பேரிடர் மீட்பு குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை, அதிபர் மைத்ரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் நேரில் பார்வையிட்டு மீட்பு பணிகளை, விரைவுபடுத்தினர். நுாற்றுக்கணக்கான அதிகாரிகளுடன், செஞ்சிலுவை சங்கத்தினரும், மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இலங்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தான், தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அந்த பகுதிகளில், மழையால் பெரியளவு பாதிப்பு இல்லை.
13