கிரீஸின் எல்லைப் பகுதி நகரான ஐடோமெனியில் அமைந்துள்ள, அங்கீகரிக்கப்படாத அகதிகள் முகாமிலிருந்து 2,031 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த நாட்டின் மிகப் பெரிய முகாமான அங்கு தங்கியுள்ள அகதிகளை, அரசால் அமைக்கப்பட்டுள்ள புதிய முகாம்களுக்கு மாற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த நிலையில் 2,031 பேர் கிரீஸின் இரண்டாவது பெரிய நகரான தெஸாலேனிகி நகரில் அமைக்கப்பட்டுள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
ஐடோமெனி முகாமிலிருந்து அகதிகளை வெளியேற்றும் பணி ஒரு வாரம் முதல் 10 நாள்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஐரோப்பாவில் அடைக்கலம் தேடி வரும் பெரும்பாலான அகதிகள், துருக்கி வந்து, அங்கிருந்து கிரீஸ் வழியாக ஐரோப்பாவுக்குள் நுழைந்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், பிற பால்டிக் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கிரீûஸயொட்டிய தங்களது எல்லைகளை மூடியதையடுத்து, எல்லைப்புற நகரான ஐடோமெனியில் 8,000-க்கும் மேற்பட்ட அகதிகள் சிக்கிக் கொண்டனர்.