தென் கொரிய அதிபர் தேர்தலில் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன் போட்டியிடுவார் என்று அந்த நாட்டில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவில் வரும் 2017-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த நாட்டைச் சேர்ந்த பான் கி-மூன், ஐ.நா. பொதுச் செயலர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வுபெறவிருக்கிறார்.
இந்தச் சூழலில், 6 நாள் சுற்றுப் பயணமாக பான் கி-மூன் தென் கொரியா வந்துள்ளார்.
அதிபர் தேர்தலில் பான் கி-மூன் போட்டியிடவிருப்பதாகவும், அதற்கான கள நிலவரங்களை ஆய்வு செய்யவே அவர் தென் கொரியா வந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பான் கி-மூன் திங்கள்கிழமை கூறியதாவது:
நான் இங்கு வந்திருப்பது குறித்து மிகைப்படுத்தியும், கற்பனையாகவும் செய்திகளை வெளியிட வேண்டாம்.
அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக என்னைப் பற்றி வெளியாகும் தகவல்கள் எனக்கே வியப்பை அளிக்கின்றன என்றார் அவர்.
எனினும், தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அவர் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.