உள்நாட்டுப்போர் நடைபெறுகிற பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், லிபியாவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள இத்தாலிக்கு நடுத்தர படகுகளில் 100-க்கும் மேற்பட்டவர்களை ஏற்றி செல்கின்றனர். இப்படி செல்கிற படகுகள், மத்திய தரைக்கடலில் அவ்வப்போது மூழ்கி விபத்துக்குள்ளாகி அகதிகள் பரிதாபமாக பலியாவது தொடர்கதை ஆகி வருகிறது.
அப்படி அகதிகள் சென்ற ஒரு படகு லிபியாவில் கவிழ்ந்து விட்டது. இந்த படகில் பயணம் செய்தவர்களின் உடல்கள் நேற்று முன்தினத்தில் இருந்து ஜூவாரா நகர் கடற்கரையில் கரை ஒதுங்கி வருகின்றன. நேற்று மாலைவரை 117 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் எந்த நாட்டினர் என்பது இன்னும் தெரியவில்லை.
இந்த படகு விபத்தில் 125 பேர் வரையில் பலியாகி இருக்க வாய்ப்பு உண்டு என்று லிபியா கடற்படை செய்தி தொடர்பாளர் கர்னல் அயூப் காசிம் தெரிவித்தார்.