சுவிஸ் நாட்டில் வேலை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் அடிப்படை மாத ஊதியமாக 2,555 டாலர் வழங்குவது குறித்து தீர்மானிக்க கருத்து வாக்கெடுப்பு நடந்தது.
சுவிஸ் என்றழைக்கப்படுகிற சுவிட்சர்லாந்து நாட்டில் உலகிலேயே முதல் முறையாக வாழ்கிற அனைத்து மக்களுக்கும், அவர்கள் வேலை செய்கிறவர்களாக இருந்தாலும், வேலை செய்யாதவர்களாக இருந்தாலும் அடிப்படை மாதாந்திர ஊதியமாக ஒரு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தொகை எவ்வளவு என்று நிர்ணயிக்கப்படாவிட்டாலும்கூட, இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்கள், மாதம் 2,555 டாலர் (இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.1 லட்சத்து 71 ஆயிரம்) வழங்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளனர். குழந்தைகளுக்கு கூட மாதம் 625 டாலர் (சுமார் ரூ.42 ஆயிரம்) வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நான்கில் ஒரு பங்கு வாக்காளர்களே இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிஸ் அரசியல்வாதிகளிடையேயும் இந்த திட்டத்துக்கு பெரிதான வரவேற்பு இல்லை. பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள எந்த ஒரு அரசியல் கட்சியும் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை.
ஆனால் இந்த திட்டத்தை ஆதரித்து 1 லட்சம் பேர் கையெழுத்து போட்டுள்ளனர். சுவிஸ் நாட்டில் இப்படி செய்கிறபோது அதை பொதுவாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது வழக்கம்.
அந்த அடிப்படையில் தான் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.