அமெரிக்காவின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்ற தகுதியை பெற்று, லாரி கிளிண்டன் வரலாறு படைத்தார்.
அமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய இருபெரும் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்கள் அங்குள்ள மாகாணங்களில் நடந்து வருகின்றன.
குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் அமெரிக்காவின் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 69) 1,239 பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று, ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை ஏற்கனவே பெற்று விட்டார். உத்தேச வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அவர், அடுத்த மாதம் நடக்க உள்ள கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
இந்த நிலையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்குரிய 2,383 பிரதிநிதிகள் ஆதரவை முன்னாள் வெளியுறவு மந்திரி லாரி கிளிண்டன் (68) நேற்று பெற்றார். இதை 2 முக்கிய ஊடக நிறுவனங்கள் உறுதி செய்தன.
அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் ஜனாதிபதியாக 1789-ம் ஆண்டு பதவி ஏற்றார். அந்த நாடு இதுவரையில் மொத்தம் 44 ஜனாதிபதிகளை கண்டுள்ளது. ஆனால் அத்தனைபேரும் ஆண்கள்தான்.
இந்த நிலையில் இப்போது லாரி கிளிண்டன், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான தகுதியை பெற்று விட்டார். 227 ஆண்டு கால அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர், பிரதான கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஆவதற்குரிய தகுதியை அடைந்திருக்கிறார். அந்த வகையில் லாரி வரலாற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், “வரலாற்றின் விளிம்பில் இருக்கிறோம். முன் எப்போதும் இப்படி ஒரு தருணம் வந்ததில்லை. ஆனால் நாம் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு”என கூறினார்