ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருவர் பெண்கள்.
ஆஸ்திரேலிய அரசின் பிரதிநிதிகள் அவையில் மொத்தமுள்ள 150 இடங்களுக்கும், செனட் அவையில் 76 இடங்களுக்கும் ஜூலை 2-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் சீக்கியரான அலெக்ஸ் பந்தால், பசுமைக் கட்சி சார்பிலும், லிசா சிங் (43) தொழிலாளர் கட்சி சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
இந்தியாவில் இருந்து 1989-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த சசி பாட்டியா, கிறிஸ் காம்பியன் ஆகியோரும் தொழிலாளர் கட்சி சார்பில் களத்தில் உள்ளனர். இந்தியாவில் பிறந்து வளர்ந்தவரான மோஹித் குமார் (39) லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். ஹரியாணாவைச் சேர்ந்த இவர் 1994-ஆம் ஆஸ்திரேலியாவில் குடியேறினார்.
தேர்தலில் போட்டியிடுவது குறித்து கிறிஸ் காம்பியன் கூறியதாவது:
இப்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் அரசியலில் பங்கேற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் இந்திய வம்சாவளியினர் அதிகமாக அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நான் 16-ஆவது வயதிலேயே தொழிலாளர் கட்சியில் இணைந்தேன். எனது கடின உழைப்பால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார் அவர்.