பாகிஸ்தானிடம் இந்தியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை விட அதிக அணு ஆயுதங்கள் உள்ளதாக ஸ்வீடன் நாட்டை சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளின் அணு ஆயுதங்கள் குறித்து, ஸ்வீடனைச் சேர்ந்த சர்வதேச அமைதி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது இந்தியாவிடம் 100 முதல் 120 அணு ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்களும் உள்ளன. கடந்த ஆண்டும் இந்தியாவை விட பாக்., அணு ஆயுதங்களை அதிகம் கொண்டிருந்தது. கடந்த ஆண்டில் இந்தியா 90 முதல் 110 அணு ஆயுதங்களும், பாக்., 100 முதல் 120 ஆயுதங்களையும் கொண்டிருந்தன.
இந்தியாவும், பாக்.,கும் அணு ஆயுதங்களை ஏவுகணைகள் மூலம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொண்டுள்ளன. சீனா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் தங்களின் அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருகின்றன. அதேவேளையில் அமெரிக்காவும், ரஷ்யாவும் தங்களிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன.
இந்த ஆண்டு துவக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாக்., இஸ்ரேல், வடகொரியா ஆகிய 9 நாடுகளிடம் மட்டும் 15,395 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும், கடந்த ஆண்டு இந்த நாடுகளிடம் மொத்தம் 15,850 அணு ஆயுதங்கள் இருந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.