அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியில் 49 பேரை சுட்டுக் கொன்ற ஒமர் மதீனின் மனைவி நூர் ஜஹி சல்மானுக்கு அந்தத் தாக்குதல் குறித்து ஏற்கெனவே தெரியும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, தாக்குதல் குறித்து அதிகாரிகளிடம் முன்கூட்டியே தெரிவிக்கத் தவறியமைக்காக நூர் சல்மானுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய போலீஸார் பரிசீலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து என்.பி.சி. தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டதாவது:
ஆர்லண்டோ நகரக் கேளிக்கை விடுதியில் தாக்குதல் நிகழ்த்திய ஒமர் மதீனின் மனைவி நூர் ஜஹி சல்மான், எஃப்.பி.ஐ. புலனாய்வு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்களையும், துப்பாக்கி உறையையும் ஒமர் மதீன் வாங்கும்போது தான் உடனிருந்ததாக அந்த வாக்குமூலத்தில் நூர் சல்மான் தெரிவித்தார்.
மேலும், தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஓரினச் சேர்க்கையாளர் கேளிக்கை விடுதியின் உள்ளமைப்பை ஆய்வு செய்வதற்காக ஒமர் மதீன் அங்கு சென்றதாகவும், தான் அவரை காரில் கொண்டு விட்டதாகவும் நூர் சல்மான் கூறினார். ஒமர் மதீன் துப்பாக்கித் தாக்குதலில் ஈடுபடவிருப்பதை முன்கூட்டியே ஊகித்ததாகக் கூறிய நூர் சல்மான், அதுகுறித்து மதீனுடன் பேச முயற்சி செய்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, கேளிக்கை விடுதித் தாக்குதல் குறித்த முன்கூட்டியே தெரிந்தும், அது குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கத் தவறியதற்காக நூர் சல்மான் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
மேலும், அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாக அவர்கள் கூறினர்.