ஜப்பானின் ககோஷிமா தென்மேற்கு கடற்பகுதி எல்லைக்குள் சீன கப்பற்படையை சேர்ந்த கண்காணிப்பு கப்பல் ஒன்று நுழைந்துள்ளது என அந்நாட்டு அரசாங்க செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் இன்று கூறியுள்ளார்.
சீன கப்பல் தங்கள் எல்லைக்குள் நுழைந்ததை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஜப்பான் விமானம் கண்காணித்துள்ளது. அதன்பின் அக்கப்பல் 5 மணியளவில் அங்கிருந்து சென்றுள்ளது என ஜப்பானின் அமைச்சரவை செயலக துணை தலைவர் ஹிரோஷிகே சேகோ கூறியுள்ளார்.
எங்களது கடற்பகுதி மற்றும் வான்வெளியில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதற்கு எதிராக எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையினை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிழக்கு சீன கடற்பகுதியில் தங்களது எல்லையாக கருதும் கடல் பகுதிக்குள் சீன கப்பற்படை கப்பல் ஒன்று நுழைந்ததை அடுத்து கடந்த வாரம் சீன தூதருக்கு ஜப்பான் அரசு சம்மன் அனுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. இதனால் இந்த பகுதி குறித்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தினை அதிகப்படுத்தியது.