இத்தாலி தலைநகர் ரோமின் மேயர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பிரதமர் மாத்தீயோ ரென்சியின் ஜனநாயக கட்சி சார்பில் ராபர்ட்டோ ஜியாசெட்டியும், எதிர்க்கட்சியான பைவ் ஸ்டார் இயக்கத்தின் சார்பில் விர்ஜினியா ராகி என்ற பெண் வக்கீலும் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பெற்ற விர்ஜினியா ராகி, ரோமின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் பெப்பி கிரில்லோவால் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பைவ் ஸ்டார் இயக்கம், குறுகிய காலத்திலேயே ஆளும் ஜனநாயக கட்சிக்கு மாற்று எதிர்க்கட்சியாக விளங்கி வருகிறது.
இத்தாலியில் பல்வேறு உள்ளாட்சிகளை தக்க வைத்திருக்கும் இந்த இயக்கம் தற்போது ரோமின் மேயர் பதவியையும் கைப்பற்றி உள்ளது. துரின் நகர மேயர் போன்ற பதவிகளையும் இந்த கட்சி கைப்பற்றி விட்டால், 2018-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் இத்தாலியின் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
ரோம் மேயர் தேர்தலில் பெற்ற தோல்வி, பிரதமர் ரென்சிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. அரசின் பொருளாதார கொள்கை மற்றும் வங்கித்துறையில் நடைபெற்ற ஊழல்களால் ரென்சிக்கு சமீப காலமாக பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு உள்ளது. மேலும் கட்சியை இடதுசாரி பாதையில் இருந்து வலதுசாரியை நோக்கி கொண்டு செல்வதாக கட்சியிலும் அதிருப்தி நிலவுவது குறிப்பிடத்தக்கது.