ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில் 2–வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக விளங்கி வந்த இங்கிலாந்து, அந்த நாட்டில் கடந்த 23–ந் தேதி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பு முடிவின் படி ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக முடிவு செய்துள்ளது.
இதனால் சர்வதேச பங்குச்சந்தைகள் அனைத்தும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இந்த சரிவில் இருந்து உலக நாடுகள் தற்போது படிப்படியாக மீண்டு வந்தாலும், இங்கிலாந்து பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகின்றன.
குறிப்பாக அந்த நாட்டு வங்கி, விமான போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. டாலருக்கு எதிராக இங்கிலாந்து நாணயத்தின் மதிப்பு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்து உள்ளது. அதாவது ஒரு பவுண்டு 1.3222 டாலராக சரிந்துள்ளது. இது பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் இங்கிலாந்தின் பொருளாதாரம் வலுவாக இருப்பதாக நிதி மந்திரி ஜார்ஜ் அஸ்போன் நேற்று தெரிவித்தார். மேலும் வருங்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.