ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பொதுவாக்கெடுப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக டேவிட்கேமரூன் அறிவித்தார்.
எனவே அங்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதற்கான ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
இதற்கிடையே பிரதமர் பதவிக்கு உள்துறை மந்திரி தெரசா மே, மின்சாரதுறை மந்திரி ஆண்ட்ரியா லீட்சம், மற்றும் நீதித்துறை மந்திரி மைக்கேல் கோவ் ஆகியோர் போட்டியிட்டனர்.
அவர்களில் தெரசாமே 199 வாக்குகள் பெற்று முன்னணி வகிக்கிறார். அவருக்கு அடுத்த படியாக ஆண்ட்ரியா லீட்சம் 84 வாக்குகள் பெற்றுள்ளார். மைக்கேல் கோவ் 46 வாக்குகளே பெற்றார். எனவே, அவர் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்வு போட்டியில் தெரசாமே, ஆண்ட்ரியா லீட்சம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அவர்களில் ஒருவர் புதிய பிரதமராவர்.
இவர்களை கன்சர்வேடிவ் கட்சியின் 1 லட்சத்து 50 ஆயிரம் உறுப்பினர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பார்கள். அதற்கான ஓட்டுப்பதிவு செப்டம்பர் 9-ந் தேதி நடக்கிறது. அதற்காக அவர்கள் இருவரும் இப்போதே தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு ஆதரவு திரட்ட தொடங்கிவிட்டனர்.
இறுதியாக கடந்த 1996-ம் ஆண்டு இரும்பு பெண்மணி என்றழைக்கப்பட்ட மார்கரெட் தாட்சர் பிரதமராக பதவி வகித்தார். அவருக்கு பிறகு பெண்கள் யாரும் பிரிட்டனில் பிரதமர் பதவி வகிக்கவில்லை. 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இங்கு மீண்டும் ஒரு பெண் பிரதமராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனேகமாக தெரசா மே பிரதமராகும் வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.