இங்கிலாந்து புதிய பிரதமர் தெரசா மே அமைச்சரவையில், லண்டன் முன்னாள் மேயர் போரிஸ் ஜான்சனுக்கு வெளியுறவுத்துறை அமைச்சக பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து விலக ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார். இதன்படி, நேற்று அவர் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவியேற்றுக்கொண்டார். இவர் கேமரூன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.
புதிய பிரதமராக தெரசா மேவிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இங்கிலாந்தின் இரண்டாவது பெண் பிரதமராக பதவியேற்ற அவருக்கு, ஜெர்மன் சான்சிலர், பிரான்ஸ் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், புதிய அமைச்சர்களாக சிலரை தெரசா மே நியமித்துள்ளார்.
இதன்படி, கேமரூன் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இருந்த பிலிப் ஹமாண்ட், நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சராக இருந்த அம்பேர் ரூத் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராக மிச்சேல் பாலோன்,
பிரக்சிட் இணையமைச்சராக டேவிட் டேவிஸ் , சர்வதேச வர்த்தக இணையமைச்சராக லியாம் பாக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கேமரூன் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜார்ஜ் ஒஸ்போர்ன் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.