பிரான்சில் நடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி தாக்குதலில் காயம் அடைந்த 50 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறிஉள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் சுற்றுலா மையங்களில் ஒன்றான நிஸ் நகரில் உள்ள புரேமனேட்டெஸ் ஏஞ்சலிஸ் கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ‘பாஸ்டில் தினக் கொண்டாட்டம்‘ வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக 25 டன் எடை கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்றை அடையாளம் தெரியாத மர்ம நபர் கொலை வெறியுடன் 150 கி.மீ. வேகத்தில் ஓட்டிச்சென்று தாக்குதல் நடத்தினான். இதில் 84 பேர் கொல்லப்பட்டனர்.
50 குழந்தைகள் உள்பட 120-க்கும் அதிகமானோர் எலும்புகள் நொறுங்கி படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தை நேரடியாக பார்த்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அதிரடிப் படை போலீசார் கன்டெய்னர் லாரியை மடக்கினர். அப்போது லாரியில் இருந்தவன் கைத்துப்பாக்கியால் அவர்களை நோக்கி சுட முயன்றான். அதற்குள் அவனை போலீசார் சுட்டுக் கொன்றனர். அந்த லாரிக்குள் இருந்து ஏராளமான துப்பாக்கிகளும், கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டன.
தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிப்பேசிய அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே, “இந்த புதிய துயரம் பிரான்சை வேதனையால் நிரப்பி உள்ளது. உயிர் இழந்தவர்களில் குழந்தைகளும் அடங்குவர். இது நிச்சயமாக பயங்கரவாதச் செயல் அன்றி வேறெதுவும் இல்லை“ என்று குறிப்பிட்டார். முன்பதிவிலும், விடுப்பிலும் உள்ள ராணுவத்தினரும், போலீசாரும் உடனே பணியில் இணையுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
சிரியாவிலும், ஈராக்கிலும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை பிரான்ஸ் எப்போதும் போல் தொடரும் என்றும் அவர் கூறினார்
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும், ஐ.எஸ். இயக்கத்தினரின் தூண்டுதலின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் பிரஞ்சு ரிவியராவின் நகரத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிஸ் நகரில் நடத்தப்பட்ட கன்டெய்னர் லாரி தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 50 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். அவர்கள் வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் மிகவும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர், என்று கூறிஉள்ளார்.