ஐ.நா.,வின் அடுத்த பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற ரகசிய ஓட்டுப் பதிவில், போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.நா., பொதுச்செயலராக கடந்த 2007-ம் ஆண்டு பதவியேற்ற பான் கி-மூன் இந்த ஆண்டு டிச., 31-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். ஐ.நா., வின் 70 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில் அடுத்தபொதுச்செயலரை தேர்ந்தெடுக்க வெளிப்படையான நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியில் 6 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் உள்ளனர். போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் நேர்காணலில் கலந்து கொண்டதுடன், ஐ.நா., பொதுக் குழு உறுப்பினர்கள், தூதர்கள், செய்தியாளர்கள் முன்னிலையில் பதவியேற்றதும் ஆற்றவுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் நடந்த ரகசிய ஓட்டெடுப்பு முடிவுகள் குறித்த விவரங்கள், போட்டியாளர்களின் நாடுகளின் ஐ.நா.,வுக்கான தூதர்கள் மூலமாக, ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதில் போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அன்டோனியோ குட்டெரெஸ் முன்னிலை வகிப்பதாகவும், அடுத்த இரு இடங்களில் ஸ்லோவேனியாவின் முன்னாள் அதிபர் டேனிலோ துர்க்கும், பல்கேரியாவைச் சேர்ந்த, தற்போதைய யுனெஸ்கோ தலைமை இயக்குநர் இரினா பொகோவா உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.