நேபாளத்தில் புதிய பிரதமரை ஒரு வார காலத்துக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசியல் கட்சியினரிடம் அதிபர் வித்யாதேவி பண்டாரி வலியுறுத்தினார்.
கே.பி.ஓலி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், அவர் ராஜிநாமா செய்வதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். இதையடுத்து, அந்நாட்டு அரசியலில் புதிய நெருக்கடி ஏற்பட்டு குழப்ப நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில், அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து ஒற்றுமை அரசை அமைக்க வேண்டும் என்று அதிபர் வித்யாதேவி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார்.
முன்னதாக, அந்நாட்டின் முக்கியக் கட்சிகளான நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), நேபாளி காங்கிரஸ், நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் அதிபர் வித்யாதேவி பண்டாரி தீவிர ஆலோசனை நடத்தினார்.
நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டா அடுத்த பிரதமராவார் என்று கூறப்படுகிறது.