சிரியாவின் அலெப்போ நகரம் முழுவதும் முற்றுகையின் கீழ் வரும் நிலையில், அங்கு 20 லட்சம் அப்பாவிப் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது என்று ஐ.நா. எச்சரித்துள்ளது.
உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியாவில் சர்வதேச மனித நேய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வரும் ஐ.நா.வின் பிரதிநிதி யாகூப் அல்-ஹிலோ, பிராந்திய ஒருங்கிணைப்பாளர் கெவின் கென்னடி ஆகியோர் இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
அலெப்போ நகரில் கடந்த சில வாரங்களாக கடும் சண்டை நிகழ்ந்து வருகிறது. இதில் சிக்கி கடந்த ஜூலை மாத இறுதியிலிருந்து 130 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
குண்டு வீச்சில், மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், மின் இணைப்புகள், குடிநீர் இணைப்புகள் பாதிக்கப்பட்டன.
அவதிக்கு உள்ளாகியிருக்கும் குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உதவிப் பொருள்களைக் கொண்டு சேர்க்க வேண்டுமானால், குறைந்தபட்சம் 48 மணி நேர சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான், மருந்து போன்ற உதவிப் பொருள்கள் தேவைப்படும் லட்சக்கணக்கானோருக்கு அவற்றைக் கொண்டு சேர்க்க முடியும். தற்போதைய நிலையில், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விரைவில் உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அலெப்போ நகரை ஏதாவது ஒரு தரப்பினர் முழுவதுமாக கைப்பற்ற கடும் முற்றுகையிடும்பட்சத்தில், 20 லட்சம் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
உணவு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்க நேரும் வகையில், முற்றுகையைப் போர் தந்திரமாகப் பயன்படுத்தினால், அது போர்க்குற்றமாக கருத இடமுள்ளது என்று ஐ.நா. சார்பில் வெளியிட்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளைக் குறி வைத்து சிரியா அரசுப் படையினர் குண்டு வீச்சு நிகழ்த்துவதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. ஆனால், மருத்துவமனைகளை கிளர்ச்சியாளர்கள் தங்களது மையங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் உண்மையிலேயே சிகிச்சை பெறாதவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதாகவும் அரசுத் தரப்பு கூறி வருகிறது.
அலெப்போவின் மேற்குப் பகுதியை அரசுப் படையினரும், கிழக்குப் பகுதியை கிளர்ச்சியாளர்களும் கட்டுப்படுத்தி வருகின்றனர். கிழக்குப் பகுதியை அரசுப் படையினர் கடந்த சில வாரங்களாக முற்றுகையிட்டுள்ளனர்.
முற்றுகையை முறியடிக்க கிளர்ச்சியாளர்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களை அழித்து, நகரை முற்றிலும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இறுதியான கடும் தாக்குதலை நிகழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசுத் தரப்பு கூறி வருகிறது.