சிரியாவின் அலெப்போ நகரில் மக்களுக்கு மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்குவதற்கு உதவியாக தினசரி 3 மணி நேரம் போர் நிறுத்தம் செய்வதாக ரஷியா அறிவித்தது.
சிரியாவின் முக்கியத்துவம் வாய்ந்த அலெப்போ நகரின் மேற்குப் பகுதியை அரசுப் படையினரும், கிழக்குப் பகுதியை கிளர்ச்சியாளர்களும் கட்டுப்படுத்தி வருகின்றனர். நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கிழக்குப் பகுதியை அரசுப் படையினர் கடந்த சில வாரங்களாக முற்றுகையிட்டுள்ளனர். முற்றுகையை முறியடிக்க கிளர்ச்சியாளர்கள் குண்டு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களை அழித்து, நகரை முற்றிலும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர, இறுதியான கடும் தாக்குதலை நிகழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசுத் தரப்பு கூறி வருகிறது.
இதனிடையே, அப்பகுதியில் காலூன்ற முயற்சித்து வருவதாகக் கூறப்படும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளைக் குறி வைத்து ரஷிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் அந்த நகரில் மருந்து, உணவு உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கருத்தில் கொண்டு தங்களின் வான்வழித் தாக்குதலை தினசரி மூன்று மணி நேரம் நிறுத்துவதாக ரஷியா அறிவித்திருக்கிறது.
இது தொடர்பாக ரஷிய மூத்த தளபதி செர்கேய் ருட்ஸ்கோய் மாஸ்கோவில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
சர்வதேச அமைப்புகள் அலெப்போ நகருக்குள் அத்தியாவசியப் பொருள்களை முழுப் பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல உதவும் விதமாக, மூன்று மணி நேர போர் நிறுத்தத்தை ரஷியா அறிவிக்கிறது. வியாழக்கிழமை காலை முதல் இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது. உள்ளூர் நேரப்படி, காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனைத்து விதமான ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். வான்வழித் தாக்குதல்களும் நிறுத்தப்படும். பொதுமக்களின் அவதியைக் கருத்தில் கொண்டு ரஷிய உதவியுடன் அலெப்போவின் காஸ்டெல்லோ சந்தைப் பகுதி வழியாக வடக்கு புறநகர் பகுதிக்கு பாதுகாப்பான பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் வழியாக 24 மணி நேரமும் நகரின் கிழக்கு, மேற்குப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்புடன் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்ல முடியும்.இந்நிலையில், தற்போது தினசரி 3 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷியா அறிவிக்கிறது என்றார் அவர்.
நேரம் போதாது: ஐ.நா. பிரதிநிதி
அலெப்போ நகருக்குள் உதவிப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு 3 மணி நேர போர் நிறுத்தம் போதாது என்று ஐ.நா. பிரதிநிதி ஸ்டீஃபன் ஓபிரையன் கூறினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ரஷியாவின் அறிவிப்பு குறித்த முழு விவரங்கள் இன்னும் எங்களது கவனத்துக்கு வரவில்லை. ஆனால் ஏராளமான அளவில் உதவிப் பொருள்களை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று அளித்துவிட்டு, அவை பாதுகாப்பாகத் திரும்பி வர வேண்டுமானால், முதல் கட்டமாக, குறைந்தபட்சம் 48 மணி நேர போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.
அந்த நகரில் சுமார் 20 லட்சம் பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள் தேவைப்படுகிறது என்று நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அலெப்போ நகரின் தென் மேற்கு புறநகர் பகுதியில் அரசுப் படையினரின் தீவிரத் தாக்குதலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் உயிரிழந்தனர் என்றும் சுமார் இரண்டாயிரம் கிளர்ச்சியாளர்கள் காயமுற்றனர் என்றும் ரஷிய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக ஏ.ஏஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.