உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வரும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ள அலெப்போ நகரை மீட்பதற்கு அதிபர் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்யா கடந்த செப்டம்பர் மாதம் வான் தாக்குதலைத் தொடங்கியது.
அலெப்போவின் பெரும்பாலான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்ய போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை நடத்துவதற்காக இதுவரை சிரியா மற்றும் ரஷ்யாவில் உள்ள விமானப்படை தளங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
இதனிடையே, குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த கட்டிடத்தில் மீட்பு பணிகளின் போது 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து ரத்த காயங்களுடன் மீட்கப்பட்டான். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், சிரியாவின் அலெப்போ நகரில் மனிதநேய நடவடிக்கைகளுக்காக 48 மணி நேர போர் நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா முயற்சிகளை மேற்கொண்டது. இதற்கு ரஷ்யாவும் நேற்று முன்தினம் தனது ஒப்புதலை தெரிவித்தது.
இந்நிலையில், மனிதநேய நடவடிக்கைகளை மேற்கொள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ரஷ்யாவின் முடிவிற்கு ஐ.நா. சபை வரவேற்பு அளித்துள்ளது.