நேபாள நாட்டின் ரவுத்ஹாத் மாவட்டத்தில் உள்ள கவுர் நகரில் இருந்து போக்காரா நகருக்கு நேற்று அதிகாலையில் பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சில் சுமார் 50 பயணிகள் இருந்தனர். சிட்வான் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இதில் நிலை தடுமாறிய பஸ், திரிசூலி ஆற்றில் விழுந்து மூழ்கியது. அப்போது பயணிகள் அனைவரும் மரணஓலமிட்டனர்.
அந்த பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் உடனடியாக மீட்பு பணியை தொடங்கினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் இந்த கோரவிபத்தில் 21 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்சுகளில் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் விபத்தின் போது பல பயணிகள் மாயமானதாக கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. கடந்த வாரம் நேபாள நாட்டின் மத்திய பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் சென்றபோது ஒரு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 31 பேர் பலியானது குறிப்பிடத்தக்கதாகும்.