இலங்கையில் கொழும்பு துறைமுகக் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கும், அதனை இயக்குவதற்கும் இந்திய முதலீட்டாளர்களின் உதவியை அந்நாட்டு அரசு நாடியுள்ளது. கொழும்பு துறைமுகக் கட்டுமானப் பணிகளை முடிப்பதற்கு சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இலங்கை அரசு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கையின் துறைமுகங்கள் துறை அமைச்சர் அர்ஜுனா ரணதுங்கா, வெளிநாட்டுப் பிரதிநிதிகள் சங்கத்தில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
கொழும்பு துறைமுகத்துக்கு இந்தியாவில் இருந்து 60 சதவீத சரக்குப் பெட்டகங்கள் வருகின்றன.
கொழும்பு துறைமுகத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 1,200 மீட்டர் நீளமுள்ள முனையத்தில் 430 மீட்டர் தொலைவுக்கு 8 கோடி டாலர்கள் செலவில் (சுமார் ரூ.536 கோடி) கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை முடிப்பதற்கு 40 கோடி டாலர்கள் (சுமார் ரூ.2,682 கோடி) தேவைப்படுகின்றன.
எனவே, இந்தப் பணிகளை முடிப்பதற்கு 20 சதவீத பங்களிப்புடன் இந்திய முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார் அவர்.