பிலிப்பைன்ஸ் நாட்டில் ஐ.எஸ். இயக்கத்தினருடன் தொடர்பு வைத்துள்ள மாவுத் பயங்கரவாத குழு இயங்கி வருகிறது. மின்டானவ் பகுதியில் இயங்கி வருகிற இந்தக் குழுவினர் குண்டுவெடிப்பு, ஆள்கடத்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தினர் மீதும் கடந்த காலத்தில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ராணுவ வீரர் ஒருவரையும், உள்ளாட்சி அமைப்பின் ஊழியர்கள் 2 பேரையும் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.
இந்த நிலையில், இந்தக் குழுவை சேர்ந்த பயங்கரவாதிகள் 20 பேர், மாராவி நகரில் உள்ள லானவ் டெல் சுர் சிறை வளாகத்துக்குள் புகுந்தனர். அங்கிருந்த காவலர்களின் துப்பாக்கிகளை பறித்து, சிறையை உடைத்து தாக்குதல் தொடுத்தனர். பின்னர் அந்த சிறையில் இருந்து 8 சக பயங்கரவாதிகளை விடுவித்தனர். அவர்களுடன் அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த 15 பிற கைதிகளும் தப்பித்தனர்.
இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.