பிரேசில் அதிபர் தில்மா ரூசெஃபை பதவி நீக்கம் செய்து, அந்நாட்டு நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரேசிலின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்ற தில்மா ரூசெஃப் மீது, அந்நாட்டு பட்ஜெட் தொடர்பான சட்ட விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அதிபர் பதவியில் இருந்து தில்மா ரூசெஃபை நீக்குவதற்கான தீர்மானம் செனட் சபையில் புதன்கிழமை கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு மொத்தமுள்ள 81 உறுப்பினர்களில் 54 பேரின் ஆதரவு தேவையாகும். ஆனால், எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக, ரூசெஃபை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஆதரித்து 61 வாக்குகள் பதிவாகின. எதிர்த்து 20 வாக்குகள் மட்டுமே பதிவாகின.
இதையடுத்து, அதிபர் பதவியில் இருந்து ரூசெஃப் நீக்கப்பட்டதாக வாக்கெடுப்பை மேற்பார்வையிட்ட தலைமை நீதிபதி ரிக்கார்டோ லிவான்டோஸ்கி அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தில்மா ரூசெஃப் சட்ட விதிகளை மீறி குற்றமிழைத்ததாக செனட் சபை உறுதி செய்து விட்டது’ என்றார்.
பதவி நீக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து சுட்டுரையில் தில்மா ரூசெஃப் வெளியிட்ட பதிவில், “54 மில்லியன் பிரேசில் மக்களின் வாக்குகளை இன்றைய தினத்தில் 61 பேர் குப்பையில் தூக்கி எறிந்து விட்டனர்; அந்த 61 பேரில் பெரும்பாலானோர் ஊழல் மற்றும் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள்’ என்றார்.
முன்னதாக, பொது வாழ்க்கையில் தில்மா ரூசெஃப் 8 ஆண்டுகள் பங்கேற்பதற்கு தடை விதிக்கக்கோரும் 2-ஆவது தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்துக்கு எதிராக 42 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் கிடைத்தன. இதனால் அந்த தீர்மானம் தோல்வியடைந்தது.