தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா நாடுகளில் ‘ஜிகா வைரஸ்’ முதலில் தாக்க தொடங்கியது. முதலில் குரங்குகள் மூலம் பரவியதாக சொல்லப்படும், ‘ஜிகா வைரஸ்’, இப்போது ‘ஏட்ஸ் எஜிப்தி’ என்ற வகை கொசுக்களால் பரவுவதாக கூறப்படுகிறது.
கர்ப்பம் தரித்த பெண்களை இந்த வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளுடன் இருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும். மூளையில் பாதிப்பு ஏற்படும்.
இந்த ஜிகா வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதது, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம், ஜிகா வைரஸ் நெருக்கடி நிலையை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்துள்ளது. ஜிகா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் பலவும் ஆராய்ச்சியில் இறங்கி உள்ளன.
இந்த நிலையில் சிங்கப்பூரில் ‘ஜிகா வைரஸ்’ வேகமாக பரவி வருகிறது. அங்கு 13 இந்தியர்களுக்கு இது தாக்கி இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. இதை சிங்கப்பூர் இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது.
இதுவரை சிங்கப்பூரில் 115 பேருக்கு ‘ஜிகா வைரஸ்’ தாக்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவர்களில் சீன நாட்டினர் 21 பேர், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் 6 பேர் அடங்குவார்கள். இதற்கிடையே மலேசியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்கு ‘ஜிகா வைரஸ்’ தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. 58 வயதான அந்தப் பெண், சிங்கப்பூர் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.