அமெரிக்காவில் மாணவர்களிடையே இருக்கும் கவிதை எழுதும் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டு தோறும் அமெரிக்க ஜனாதிபதியின் வெள்ளை மாளிகையில் ‘தேசிய மாணவ கவிஞர்கள்’ என்ற பெயரில் கவியரங்க நிகழ்ச்சி நடந்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான கவியரங்க நிகழ்ச்சி நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் நடந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய வம்சாவளிகளான மாயா (வயது 17), கோபால் ரத்னம்(17) உள்பட 5 மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு தங்களது கவிதைகளை வாசித்தனர்.
அமெரிக்காவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த மாயா தனது தாய்மொழியான தமிழ் மொழியை இழந்து வருவது குறித்து ஆங்கிலத்தில் வாசித்த கவிதை, மிச்செல் உள்பட அனைத்து ரசிகர்களையும் நெகிழ வைத்தது.
மாயா தனது கவிதையில் ‘‘ நான் கடந்த 16 ஆண்டுகளில் பலவற்றை இழந்து இருக்கிறேன். ஆனால் அவற்றையெல்லாம் விட முக்கியமான ஒன்றை இழந்து விட்டேன். தலைமுடி உதிர்வது போல் என் இனத்தின் அடையாளத்தை இழக்க தொடங்கி இருக்கிறேன். தாயே, நான் வழுக்கை தலை ஆகிவிடுவேனோ என அஞ்சுகிறேன். நான் தமிழ் மொழி பேசி 3 ஆண்டுகள் ஆகிறது ’’ என வாசித்தார்.
மாயா இந்த கவிதையை வாசித்த போது அரங்கத்தில் அனைவரும் கரவொலி எழுப்பினர். மிச்செல் கைதட்டியதோடு சத்தம் எழுப்பி அவரை உற்சாகப்படுத்தினார்.
‘‘நான் எனது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை அடிப்படையாக கொண்டு பல கவிதைகளை எழுதி உள்ளேன். நான் எனது தமிழ் மொழியை இழந்து வருவது வேதனை அளிக்கிறது’’ என மாயா கூறினார்.
அதே போல் சென்னையை சேர்ந்த தந்தைக்கும், கேரளாவை சேர்ந்த தாய்க்கும் பிறந்த கோபால் ரத்னம், ‘இந்த ஆப்பிள்’ என்ற தலைப்பில் தனது கவிதையை வாசித்து பாராட்டு பெற்றார்.