சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசை பதவியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் அவரது அதிருப்தியாளர்கள் தொடங்கிய போராட்டம், உள்நாட்டுப் போராக உருவெடுத்தது. ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த அந்நாட்டில் உள்ள பல்வேறு போராளி குழுக்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் இணைந்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதுதவிர ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிப்பிட்ட பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இதில், சில குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அரசுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம் படைகளை களமிறக்கியது. ஐ.எஸ். ஆதிக்கம் உள்ள பகுதிகளில் ரஷ்யாவும், அமெரிக்க கூட்டுப்படைகளும் தனித்தனியாக தாக்குதல் நடத்தின.
லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியுள்ள இந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஐ.நா. தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கையெழுத்திட்டன. அதேசமயம் தீவிரவாதிகள் மீது தாக்குதலை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது நடைமுறைக்கு வந்ததையடுத்து ஒரு வாரம் வன்முறைச் சம்பவங்கள் குறைந்திருந்தன. அதன்பின்னர் ஆங்காங்கே சண்டை ஆரம்பித்துவிட்டதாகவும், சண்டை நடக்கும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று சேரவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில் ஐ.நா. பொது சபை கூட்டத்தின் இடையே செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி, தொடர் வன்முறை முற்றுகையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் சென்று சேராத நிலையிலும் போர்நிறுத்த உடன்படிக்கை அமலில் உள்ளதாகவும், ஆனால் அது எந்த நேரத்திலும் உடையலாம் என்றும் தெரிவித்தார்.
‘எங்கள் படைகளிடம் இருந்து வரும் முழு தகவலுக்காக காத்திருக்கிறோம். போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக இன்று 8 இடங்களில் மனிதாபிமான உதவிகள் சென்று சேரவேண்டும்’ என்றும் கெர்ரி கூறினார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் 199 முறை மீறப்பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த இரு தினங்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.