தென்சீனக் கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா வரலாற்று உரிமைகள் கோருவதற்கு சட்டரீதியில் எந்த முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பினை சீனா நிராகரித்தாலும், சீனாவுக்கு இது தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் ஜப்பான் ஈடுபட்டுள்ளது. அதாவது பிரச்சினைக்குரிய தென் சீனக்கடலில், அமெரிக்காவுடன் சேர்ந்து ரோந்துப் பயிற்சியில் ஈடுபடப்போவதாக ஜப்பான் ராணுவ மந்திரி டொமோமி இனடா சமீபத்தில் அறிவித்தார்.
இதன்மூலம் தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சூழ்நிலையை ஜப்பான் குழப்ப முயற்சி செய்கிறது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.
‘பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. எனவே, சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் இணைந்து அங்கு அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை கொண்டு வர வேண்டும்’ என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.