ஐரோப்பா கண்டத்தில் ருமேனியா நாடு 3 புவித்தட்டுகள் குறுக்காக சந்திக்கிற இடத்தில் அமைந்துள்ளதால் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
1977-ம் ஆண்டு அங்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. அதில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர்.
இந்த நிலையில் நேற்றும் அந்த நாட்டில் அதிகாலை 2.11 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. வரான்சியா பகுதியை மையமாக கொண்டு தாக்கிய இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.3 புள்ளிகளாக பதிவானது.இந்த நில நடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன. அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்து, வீதிகளுக்கு ஓடிச்சென்று தஞ்சம் அடைந்தனர்.இந்த நில நடுக்கத்தின் தாக்கம் அண்டை நாடுகளான பல்கேரியாவிலும், மால்டோவாவிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருமேனியாவில் ஏற்பட்ட நில நடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்தபோதும், உயிரிழப்போ, பெருத்த சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.