ஏமனில் செங்கடலில் அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். மேசன் போர்க்கப்பல் சமீபத்தில் ஏவுகணைகள் தாக்குதலுக்கு ஆளானது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்கள்தான் இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும் என்று அமெரிக்கா கருதுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மறுத்தபோதும், அதை அமெரிக்கா ஏற்கவில்லை.
இந்த நிலையில், ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரேடார் தளங்களை குறிவைத்து அமெரிக்கா அதிரடியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 ரேடார் தளங்கள் நிர்மூலமாகி விட்டதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் கூறி உள்ளது.
ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவின்படியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏமனில் கிளர்ச்சியாளர்களின் இலக்கை குறிவைத்து, அமெரிக்கா இப்படி தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.