கோவாவில் நாளையும் நாளை மறுதினமும் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக நாளை இந்தியாவுக்கு வருகை தரவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், முன்னதாக இன்று வங்காளதேசம் நாட்டுக்கு சென்றார்.
30 ஆண்டுகளுக்கு பின்னர் வங்காளதேசத்துக்கு வருகைதரும் முதல் சீன அதிபர் என்பதால் அவரை சிறப்பாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதனையடுத்து, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவை இன்று பிற்பகல் சந்தித்து பேசிய ஜி ஜின்பிங், இருநாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக தொடர்புகளைப் பற்றி விரிவாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, சீனா, வங்காளதேசம் இடையே 27 ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது. கடன்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறையில் அதிக அளவில் முதலீடு செய்வது உள்ளிட்ட ஒப்பந்தகள் கையெழுத்தாகின.
சந்திப்பிற்கு பிறகு பேசிய ஜின்பிங், “வங்கதேசம்-சீனா சிறந்த அண்டை நாடுகள், சிறந்த நண்பர்கள் மற்றும் சிறந்த கூட்டாளிகள். சீனா வங்காளதேசம் இடையே புதிய வரலாறு தொடங்கியுள்ளது” என்று கூறினார்.