அவுஸ்ரேலிய கிறிஸ்துமஸ் தீவில் கொரோனா அச்சத்தில் ஈழத் தமிழ் அகதி குடும்பம்

அவுஸ்ரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் செயல்படும் குடிவரவுத் தடுப்பு முகாமில் கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் அதிகாரிகள் பணியாற்றுவதாக அங்கு தங்கவைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பம் அச்சம் தெரிவித்துள்ளது.

இத்தடுப்பு முகாமில் பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவுஸ்ரேலியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து கிறிஸ்துமஸ் தீவுக்கு வந்துள்ள அதிகாரிகள் 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலின்றி பணியாற்றுவதாகக் கூறப்படுகின்றது.

கிறிஸ்துமஸ் தீவு, அவுஸ்ரேலியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து சுமார் 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் அமைந்திருக்கிறது.

“ஒரு நாளுக்கு 10 முதல் 15 ஊழியர்கள் நாங்கள் இருக்கும் இடத்திற்குள் வந்து செல்வார்கள். எனது சொந்த வீட்டில் தங்கியிருக்கிறேன் என்றால் யார் உள்ளே வரலாம் எனக் கட்டுப்படுத்தலாம்,” எனக் கூறும் பிரியா, தடுப்பு முகாமில் அவ்வாறு கட்டுப்படுத்த முடியாது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

மருத்துவ ஊழியர் ஒருவர் தங்கள் குடும்பத்திற்கு சானிடைசர் மற்றும் தமிழில் கொரோனா தொற்றைப் பற்றிய தகவல் குறிப்பை வழங்கியதாகக் கூறுகிறார பிரியா. ஆனால் 1.5 மீட்டர் இடைவெளியை தங்கள் குடும்பத்துடன் உரையாடும் அதிகாரிகள் கடைப்பிடிப்பதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே நீரழிவு நோய் கொண்டுள்ள பிரியா, தடுப்பு முகாமிற்குள் உள்ள தங்கள் குடும்பத்திற்கு தொற்று பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறார்.

“கிறிஸ்துமஸ் தீவுக்கு பயணிக்கும் பாதுகாப்பு மற்றும் மருத்துவ சேவை வழங்கும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில்லை என்ற கவலை எழுந்துள்ளது,” எனக் கூறியிருக்கிறார் தமிழ் அகதி குடும்பத்தின் வழக்கறிஞரான கரினா போர்ட்.

கடந்த மார்ச் 18ம் திகதி கிறிஸ்துமஸ் தீவுக்கு பயணிப்பவர்களுக்கு தடை விதித்த தீவின் நிர்வாகம், தீவில் வாழ்பவர்களும் தேவையான ஊழியர்களும் மட்டுமே தீவினுள் நுழைய அனுமதி வழங்கியது. அத்துடன் கிறிஸ்துமஸ் தீவுக்கு திரும்புபவர்கள் 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலும் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2012 இல் படகு வழியாக இலங்கையிலிருந்து வெளியேறி அவுஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 இல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்ரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டனர். தஞ்சக்கோரிக்கையாளர்களான அவர்களுக்கு அவுஸ்ரேலியாவிலேயே இரு பெண் குழந்தைகள் (கோபிகா, தருணிகா) பிறந்தன.

அவுஸ்ரேலியாவின் பிலோயலா (Biloela) நகரில் வசித்து வந்த இவர்களின் விசா, கடந்த மார்ச் 2018ல் காலாவதியாகியதாக கைது செய்யப்பட்டு மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர். அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருந்த நிலையில் அம்முயற்சி கடைசி நிமிட நீதிமன்ற தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டு, தற்போது கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்