Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கோவிட் 19 எதிர்த்துப் போராடுவதில் மக்களின் பொறுப்பு முக்கியமானது

கோவிட் 19 எதிர்த்துப் போராடுவதில் மக்களின் பொறுப்பு முக்கியமானது

2 minutes read

பொதுமக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் !!

புதுடெல்லி : நாடு முழுவதும் வேகமாக பரவி வருகின்ற கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மக்களின் பொறுப்பு மிகவும் முக்கியமானது என பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய பொதுச்செயலாளர் அணீஸ் அகமது பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துரதிருஷ்டவசமாக கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவி மனித உயிர்களை ஆபத்தான விகிதத்தில் பாதித்துள்ளது. ஆரம்ப கட்டத்துடன் ஒப்பிடும்போது, வைரஸ் தொற்று மற்றும் இறப்புக்கான வாய்ப்புகள் பல மடங்கு என்று அரசாங்க அதிகாரிகளும், சுகாதார நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். முன்னதாக, வயதான மற்றும் ஆரோக்கியமற்ற நபர்கள் மரணத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், இப்போது குறைந்த வயதுடைய  மற்றும் ஆரோக்கியமான இள வயதினரின் மரணங்கள் அதற்கு  சமமாகவே உள்ளன. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தயாரிப்புகள் மூலம் அதனை தடுப்பதற்கு அரசுகள், குறிப்பாக மத்திய அரசு முற்றிலும் தோல்வியுற்றது என்பது இப்போது நிரூபிக்கப்பட்ட உண்மை.

ஆனால், கோவிட் தொற்றுநோய் மேலும் பரவுவதைத் தடுப்பதிலும், நம்முடைய சொந்த மற்றும் சக குடிமக்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும், நாம் அனைவரும் மிகவும் பொறுப்பாக மற்றும் கவனமாக நடந்து கொள்ள வேண்டிய நேரம் இது. இது போன்ற முக்கியமான சூழ்நிலைகளில், நாம் அனைவரும் குடிமக்களாகிய நமது  பொறுப்புகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியமானது. எனவே, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக, எங்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் பின்வரும் விடயங்களை நினைவூட்டுவது பொருத்தமானது என்று நான் நினைக்கிறேன்.

வீட்டில் தங்கியிருத்தல், சமூகக் கூட்டங்களைத் தவிர்ப்பது, உடல் ரீதியான சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் எப்போதும் முகக்கவசம் அணிவது சிறந்த முன்னெச்சரிக்கைகள் ஆகும். மருத்துவமனை படுக்கைகளை ஏற்பாடு செய்தல், ஆக்ஸிஜன் வழங்கல் மற்றும் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வது போன்ற அவசர சேவைகளின் தேவைகளுக்கு நாம் வெளியில் செல்லலாம். ஆனால், இந்த சமூக சேவைகளில் ஈடுபடும் ஒவ்வொரு நபரும் மற்றவர்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் முன்பு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் எடுக்க வேண்டும்.

நீங்கள் சில சிறிய அறிகுறிகளை உணர்ந்தாலும் கூட, தாமதமின்றி கோவிட் சோதனைக்கு உட்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. இது பதற்றத்தை தவிர்க்கவும் உடல் ஆரோக்கியம் மோசமடைவதைத் தடுக்கவும் உதவும். மருத்துவமனையில் அனுமதிப்பது போன்ற மருத்துவ உதவிகளைப் பெற சோதனை முடிவுகள் மிக முக்கியம். வருமுன் காப்பதே சிறந்தது என்ற பழமொழி கோவிட் வைரஸ் தொற்று விஷயத்தில் மிகவும் பொருத்தமானது. தடுப்பூசி தொற்றுநோயை தடுக்கும் என்பது உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, கோவிட் 19 மேலும் பரவுவதற்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் தடுப்பூசி எடுத்துக்கொள்வது சிறந்த வழி. பக்க விளைவுகள் மற்றும் முன்பே இருக்கும் சுகாதார பிரச்சினைகள் குறித்து அச்சம் உள்ளவர்கள், தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மருத்துவ நிபுணர்களிடமிருந்து நம்பகமான மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இறுதியாக, மனித உயிர்களின் இறுதி மீட்பாளன் இறைவன் மட்டுமே என்பதை நாம் அறிந்துள்ளதால் இந்த கொடிய தொற்றுநோயிலிருந்து நம்மைக் காப்பாற்றுவதற்காக சர்வ வல்லமையுள்ள, கருணையாளனிடம் நாம் பிரார்த்திப்போம். என அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More