செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா திரைவிமர்சனம் | அமைதி (‘நவரசா’வில் ஈழக் கதை)

திரைவிமர்சனம் | அமைதி (‘நவரசா’வில் ஈழக் கதை)

1 minutes read

“பீஸ்” வெளிவந்தபோது எல்லோரும் உணர்வு பூர்வமாக இருந்தார்கள். எப்போதும் ஈழம் உணர்வு பூர்வமானதுதான். அதில் மாற்றம் ஏற்படாது. ஏற்படவும் வேண்டியதில்லை. ஆனால் அது  நம்முடைய பின்னடைவாக ஒரு போதும் இருந்து விடக்கூடாது.

எங்களுக்கு மனநிறைவைத் தரும் படைப்புகள் திரையில் தோன்றாதா என்ற ஏக்கம் எப்போதும் இருக்கிறது. அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாகவே முன்னேற முடியும் என்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.  ஒரு கலைஞனாக பொறுப்புகளையும் நிச்சயமாக புறந்தள்ளி விட முடியாது. நாம் நிற்கும் உலகச் சூழல் அப்படியானது!. படைப்புகள் சார்ந்து, அதில் நிறை – குறைகள் இருக்கலாம்… சரிசெய்து கொள்வோம். முன் நகர்வோம்.

பீஸ் ஈழத்தமிழர்களுக்கு ஒரு திரையில் ஒரு  முக்கியமான கலை நகர்வு என்பதை பதிவு செய்ய வேண்டியது இருக்கிறது. முதல் காட்சி தொடங்கி ஈழ நிலத்தை நமக்குள் படியவைத்து விடுகிறார்கள். இலைகள் உதிர்ந்து கருகிய மரத்தில் தொடங்கி, கைவிடப்பட்ட வீட்டைக் கடந்து முறிந்த பனைகளில் காட்சி முடிகிறது. அடுத்து புலிகளின் பாதுகாப்பு அரணைக் காட்டுகிறார்கள்.  இதற்கு மேல் காட்சிகளை விளக்க வேண்டியதில்லை. இந்த மண் எங்களின் சொந்த மண்… ஈழம் அறிந்தவர்கள் மேற்கொண்டு நிரப்பிக் கொள்வார்கள். இந்த மண் எங்கள் சொந்த மண் 1990களில்  எல்லோர் வாய்களிலும் ஒலித்துக் கொண்டிருந்த பாடல். ஆத்ம திருப்தியை தரும் இப்படி  ஒரு படத்திற்கு எவ்வளவு நாட்கள் காத்திருந்தோம்!.

படத்தின் கதை – வசனம் – சோமீதரன்.

பெருமையுடன் சொல்லத்தானே வேண்டும். குறையென்று பிடித்து தொங்க ஏதுமில்லை. நிறைவு, கலை – ஒளிப்பதிவு – மிகையற்ற நடிப்பு – அடக்கி வாசிக்கப்பட்ட இயக்கம். திரைப்படக்குழுவுக்கு பாராட்டுகள்.

பனங்காய்க்கு சுடுவார்களா?. அதெப்படி புலி கெட்ட வார்த்தை பேசும்?. ஒரு வார்த்தை என்றாலும் அனுமதிக்க முடியாது!. கவனம் செலுத்துங்கையா… புத்தி சொல்லி விட்டேன். போராளிகளும் மனிதர்கள்தான். அவர்கள் கிண்டல் அடிக்கக்கூடாது என்றோ கோபப்படக்கூடாது என்றோ நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இயல்பு அப்படி இருக்கும் என்று எந்த உறுதியும் இல்லை. அவர்களும் நம்மில் ஒருவர்தான்.  இதையெல்லாம் பேசி ஒரு அற்புதமான படைப்பை ஏன் தவற விட்டோம் என்றுதான் யோசிக்க வேண்டும். நாய்க்குட்டியை தம்பியாக நினைக்கும் ஒரு சிறுவன். விடுதலைக்காக வீரமரணம் அடைந்த தன் அண்ணனை நினைத்து கொண்டு சிறுவனின் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கும் ஒரு போராளி. எதிரியையும் ஒரு நிமிடம் நம்பி விடும் இளகிய மனம். எவ்வளவு இருக்கிறது… எதையும் தவறவிடாமல் பதிவு செய்திருக்கிறது பீஸ். கைவிடப்பட்டு, பாயில் சுற்றப்பட்ட மனித உடலை துப்பாக்கி ரவை துளைத்துப் பறக்கும் காட்சி பேசாத அரசியலா… மனித அவலமா?.

ஈழ இலக்கியங்கள் தவிர்க்க முடடியாதவையாக மாறிக்கொண்டிருப்பது போல ஈழ திரைப்பதிவுகளும் உருவாகும். அதைத் தவிர்க்கவே முடியாது. இன்றைக்கும் ஒரு யூத இனப்படுகொலை பற்றிய திரைப்படம் வந்து கொண்டுதான் இருக்கிறது. எப்படி தமிழீழப்போராட்டத்தையும் இனப்படுகொலையையும் தமிழர்கள் கடந்து போய்விட முடியும்?. ஒருபோதும் சாத்தியமில்லை.

பீஸ் – தவறவிட்டவர்கள் பார்த்து விடுங்கள்.

-வாசு முருகவேல்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.