“யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும்” என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னிமாவட்ட வேட்ப்பாளருமான சிவசக்தி ஆனந்தன், “நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். இதற்கு சாக்குபோக்கு சொல்லும்வரை இந்தநாடு முன்னேறுவதற்கு இடமில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த கால தேர்தல்கள் போல் அல்லாது இம்முறை தேர்தலில் தமிழ் கட்சிகள் தீர்வுடன் அபிவிருத்தி குறித்த விடயம் மக்கள் முன் வைப்பதற்கான பின்னணி என்ன?

அரசியல் உரிமையும் அதிகாரமும் இல்லாமல் அபிவிருத்தியினை முன்னெடுக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது இராஜதந்திர தோல்வியை மூடிமறைப்பதற்காக தற்பொழுது அரசியல் தீர்விற்கு எத்தனைகாலம் எடுக்கும் என்பது தெரியாது. அதுவரையில் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியைப் பிற்போட முடியாது என்ற முழக்கத்தை முன்வைத்து மக்களை திசைதிருப்பும் நோக்கில் அரசியல் தீர்வுக்கும் அபிவிருத்திக்கும் ஆணைதாருங்கள் என்று இத்தேர்தல் பரப்புரைகளில் கூறிவருகின்றது.ஆனால் நல்லாட்சி அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் போதும் அவ் அரசாங்கத்தின் பாதுகாப்பு செலவிற்கு இரட்டிப்பு தொகை ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திற்கும் கையுயர்த்தி ஆதரவு தெரிவித்தபோதும் ஏன் அபிவிருத்தி குறித்து பேசவில்லை.

நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தென்னிலங்கையில் ஆட்சியில் இருப்பவர்களிடம் அரசியல் உரிமையும் இருக்கின்றது. ஆட்சி அதிகாரமும் அவர்களது கைகளிலேயே இருக்கின்றது. இந்தநாடு சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அப்பகுதிகளில் எத்தகைய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை முன்னிறுத்தியே அவர்கள் அரசியல் செய்கின்றனர். ஆக அவர்களிடமே அபிவிருத்தி குறித்து எத்தகைய திட்டமும் இல்லை. வேலையின்றி இருக்கும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திசைதிருப்புவதற்காகவும் தமது கையாலாகத்தனத்தை மூடிமறைப்பதற்காகவும் நிலைபேறான அபிவிருத்திகளை மேற்கொண்டு விட்டால் சிலரது தனிப்பட்ட வருமானம் நின்றுவிடும் என்பதற்காகவுமே தென்னிலங்கை அரசியல் சமூகம் நிலைபேறான அபிவிருத்திகளில் அக்கறையின்றிஇ நாட்டுமக்களை தொடர்ந்தும் அன்னிய நாடுகளின் வளங்களில் தங்கி நிற்க வைக்கின்றது. இதற்கு தமிழர் விரோதச் செயற்பாடு அதற்கு பக்கதுணையாக இருக்கின்றது.

இந்த உண்மையை மறைப்பதற்காகவே சிங்கள பௌத்த மேலாதிக்க வாதம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. ஏதோ இந்த நாடு தனிச்சிங்கள பௌத்த மக்களுக்குச் சொந்தமானது என்பதை வலியுறுத்திஇ ஏனைய தேசிய இனங்கள் வாழ்வதற்கே அருகதையற்றவர்கள் என்பதை நிலைநிறுத்திஇ இதனை சிங்கள பௌத்த நாடாகப் பிரகடனப்படுத்துவதுதான் தமது முதலாவது பணி என்பதுபோல் சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் கங்கனம் கட்டி செயற்படுகின்றன. ஆக, சகல வளங்களும் இருந்தே அபிவிருத்தி செய்ய விரும்பாதவர்கள் அதிகாரங்களற்ற எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு விரும்புவார்களா என்பது தெரியாமலே தனது தவறுகளையும் கையாலாகாத் தனத்தையும் மூடிமறைப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளித்துள்ளது.

இதுவரை காலமும் எமது பகுதிகளில் எத்தகைய அபிவருத்திகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும். அதற்கு எமக்கு உரித்துடைய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். உரிமையைப் பெற்றுவிட்டால் அபிவிருத்தியை நாமே மேற்கொள்வோம் என்று ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முழங்கிவந்தனர்.

யுத்தம் முடிவடைந்து பதினொரு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும்இ எமது பிரதேசத்து மக்கள் பாரிய இராணுவஇ புலானாய்வுப் பிரிவினரின் அச்சுறுத்தலுக்கும் கண்காணிப்புக்கும் மத்தியில் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில்இ புதிதாக ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதாகக்கூறி எம்மைத் தொடர்ந்தும் தங்களது கிடுக்கிப் பிடியின்கீழ் வைத்திருக்கும் சூழலில் இதிலிருந்து விடுபடுவதே எமது முதலாவது பணியாக இருக்க வேண்டும்.

இன்றைய கொரோன அச்சுறுத்தல் சூழ்நிலையிலும் கொரோனா தாக்கம் இல்லாத எமது வடக்கு-கிழக்கே இராணுவத்தின் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்கள் நடமாடுவதற்கே அஞ்சுகின்ற சூழல் நிலவுகின்றது. இவை அனைத்தும் எமது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளமையை முன்பைவிடத் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றன.

அத்துடன் எமக்கான அதிகாரப்பகிர்வை வழங்கவே முடியாது என்று இன்றைய ஆட்சியாளர்கள் கூறுவதிலிருந்து எமக்கு உரித்துடைய அரசியல் உரிமையைத் தாங்கள் பறித்து வைத்திருக்கிறோம் என்பதும் தெளிவாகின்றது. இதற்கு எதிராக மக்களை ஓரணியில் திரட்ட வேண்டிய சூழலில், இதற்கான கட்டமைப்பை ஏற்கனவே கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கடமையைச் செய்யாமல் விட்டதை மறைப்பதற்கே இன்று அபிவிருத்தி போர்வையை போர்த்துக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்கிறது.

இதுவரை காலமும் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக உருவாக்குவதற்காகவும் மக்களின் அபிலாசைகளை மக்களின் பங்களிப்புடன் முன்னெடுப்பதற்காகப் போராடிய நாம், அந்த முயற்சி பலனளிக்காமையால் இன்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் இணைந்து கூட்டமைப்பு செய்யத் தவறிய விடயத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். நாம் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலிலேயே ஆயுதப் போராட்டத்திற்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேற்கொள்வதற்காகவும் பல சிறிய தொழில் முயற்சிகளை முன்னெடுத்திருந்தோம். அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் ஓர் அங்கமே மக்களின் வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் என்பதை நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்துள்ளோம். இதுவே நிலைபேறான அபிவிருத்திக்கு வழிவகுக்கும்.

உங்களது கட்சியும் அபிவிருத்தி குறித்து கூறியுள்ள நிலையில் அந்த அபிவிருத்தி என்ன? அதற்கான உங்கள் கட்சியினது வேலைத் திட்டம் யாது?

முதலாவதாக அபிவிருத்தி என்றால் என்ன என்பதில் எமக்குத் தெளிவு இருக்க வேண்டும். வாசிக சாலைக்கு கட்டடம் கட்டிக்கொடுப்பதும், விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்துக் கொடுப்பதும்,வீதிகளில் விளக்குகளைப் பொருத்துவதும், அதிவேகப் பாதைகளை அமைப்பதும், இருக்கின்ற தொடரூந்து பாதைகளைச் செப்பனிடுவதும், துறைமுகங்களையும் விமான நிலையங்களையும் புனரமைப்பதும் அவற்றில் நவீன வசதிகளை ஏற்படுத்துவதும் ஒரு போதும் அபிவிருத்தி என்னும் பொருளில் வராது. இவை அனைத்திற்கும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் என்பது பொருள்.

உலகமயமாக்கல் சூழலில் வளர்ந்த நாடோ வளர்ந்துவரும் நாடோ அல்லது பின்தங்கிய நாடோ எதுவாக இருந்தாலும் மேற்குறித்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பெற்றிருப்பது அத்தியாவசியமானது. இது வளர்ச்சியடைந்த நாடுகள் தமது வசதிக்காக மேற்கொள்கின்ற அல்லது ஏனைய நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கு முன்வைக்கின்ற மிக முக்கியமான கோரிக்கை. இதற்காக வளர்ந்த நாடுகள் பல்வேறு திட்டங்களின்கீழ் எமது நாட்டிலும் இத்தகைய கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு நிதியுதவியை வழங்குகின்றன. அந்த நிதியுதவி அரசாங்கங்களுக்கே குறிப்பிட்ட நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுப்பதற்காக வழங்கப்படும். எம்மிடம் உள்ள சில அதிமேதாவிகள் இதனைப் புரிந்துகொள்ளாமல் அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று துள்ளுகின்றனர். இத்தருணத்தில் இவர்களைச் சரியாக இனங்கண்டு எமது மக்கள் அவர்கள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும்.

விவசாயத்துறையை உற்பத்திசார் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் என்றும் எமது உற்பத்திப் பொருட்களைப் பூரணப்படுத்தி பெறுமதி சேர் உற்பத்தியாக மாற்றிஇ ஏற்றுமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கடந்த ஆட்சியில் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்தோம்.

அவற்றை மேற்கொள்வதற்காகவே பொருளாதார வர்த்தக மையம் வவுனியாவின் ஓமந்தையில் இருபது ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்படவேண்டும் என்றும் கோரினோம். பல தொழில்முனைவோருடன் இணைந்து கலந்துரையாடியதன் பின்னரே நாம் அந்த முன்மொழிவுகளைக் கையளித்திருந்தோம். ஆனால் எத்தகைய ஆய்வும் மேற்கொள்ளாமல் மொத்த காய்கறி விற்பனை அங்காடியை இடம் மாற்றுவதுபோல் நினைத்து இன்று யாருக்கும் பயன்படாத மதவுவைத்தகுளம் பகுதியில் உள்ள இரண்டு ஏக்கர் காணியில் அந்த மையத்தை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறிப்பாக தமிழரசுக் கட்சியினர் செயற்பட்டனர். இவர்கள்தான் இன்று அபிவிருத்தி குறித்துப் பேசுகின்றனர். இதிலிருந்து இவர்களால் அரசியல் உரிமைகளையும் வென்றெடுக்க முடியாது அபிவிருத்திகளையும் மேற்கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது.

அன்று நாம் அளித்த திட்டத்தின் அடிப்படையிலேயே இன்றைய ஜனாதிபதியும் விவசாய உற்பத்திப் பொருட்களை அப்படியே ஏற்றுமதி செய்வதற்குத் தடைவிதித்து, பெறுமதிசேர் பொருளாக மாற்றி முடிவுறுத்தப்பட்ட உற்பத்திப் பொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார். இதிலிருந்து இந்நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தென்னிலங்கை அரசியல் சமூகத்தினரிடமும் அபிவிருத்தி குறித்தும் நாட்டின் வருவாயைப் பெருக்குவது குறித்தும் எத்தகைய திட்டமும் இல்லை என்பது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுள் நாமும் ஒருவர் என்பதன் அடிப்படையிலேயே எமது உரிமைகளை வென்றெடுத்து எமது வருங்கால சந்ததியினர் நிம்மதிப் பெருமூச்சுடன் இலங்கையர் என்ற சம அந்தஸ்துடன் தலைநிமிர்ந்து சகல உரிமைகளையும் பெற்று சமத்துவமான அரசியல் சூழலில், தாம் விரும்பிய படிப்பைப் படித்து, தமக்கு விருப்பமான துறையில் பணியாற்றி நாட்டையும் தமது சமூகத்தையும் முன்னேற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்காகவே தொடர்ந்தும் போராடுகிறோம். முன்னர் ஆயுதப் போராட்டத்தின் மூலமாகவும் தற்போது ஜனநாயக அரசியல் சூழலிலும் எமது கொள்கையில் எத்தகைய மாற்றமும் இல்லை. மக்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகாமல் யாரும் யாரின் தோளின்மீதும் சவாரி செய்யாமல் கைகோர்த்து நடக்க வேண்டும் என்பதே எமது விருப்பம். அதற்காகவே எம்மினத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.

எம்மிடம் உள்ள அபிவிருத்தித் திட்டங்கள் நிலைபேறானவை. அவை முழுநாட்டின் வருவாயையும் அதிகரிக்கச் செய்யக்கூடியவை. ஏற்றுமதிப் பொருளாதாரத்தை அதிகரித்துஇ மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யக்கூடியவை. மக்களின் ஆணையுடன் எமக்குரிய அதிகாரங்களை வென்றெடுத்து அவற்றை முழுமையாகச் செயற்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதுவரை எமது மக்களுக்கான வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் ஏராளமான திட்டங்களை வகுத்துவைத்துள்ளோம். யாரிடமும் திட்டங்கள் எதுவும் அற்ற சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமாக இருக்காது.

வடக்கையும் கிழக்கையும் பூகோள ரீதியாக பிரிப்பதற்கான செயற்பாடு தொடர்பில் கடந்த காலத்தில் எதிர்ப்பை வெளியிட்டு வந்தீர்கள். இதனை தடுக்க ஏனைய தரப்புடன் இணைந்தான உங்கள் செயற்பாடு என்ன?

நாம் எமது மண்ணுடன் எந்தவகையிலும் தொடர்பற்றவர்கள், தமது மேலான்மைவாதத்தை நிலைநிறுத்துவதற்காக அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தியதன் காரணமாகவே அவற்றுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மக்களை அணிதிரட்டி போராடியவர்கள், எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக தனிநாடு கேட்டு ஆயுதம் ஏந்திப் போராடியவர்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினூடாக இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையை உருவாக்கி திருகோணமலையைத் தலைநகராக அறிவித்து செயலாற்றியவர்கள் இதன் மூலம் வடக்கு-கிழக்கு தமிழ்மக்களின் பிரிக்கமுடியாத மறுக்க முடியாத பூர்வீகத் தாயகம் என்பதை நிலைநிறுத்தியவர்கள்.

ஆகவே, இதனைப் பிரிப்பதற்கு எதிராகக் குரல்கொடுக்கும் அனைத்து சக்திகளுடன் நாம் இணைந்து போராடியே வந்துள்ளோம். கடந்த ஆட்சிக்காலத்தில் ஆயிரம் விகாரைகள் அமைப்பதற்கு வரவு-செலவு திட்டத்தை ஆதரித்து கையுயர்த்தியவர்களும், வன்னித் தேர்தல் தொகுதியின் எல்லைப்புற கிராமங்களில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களுக்கு காணி உறுதி வழங்கியவர்களும் எமது கட்சியைத் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.

எமது மக்கள் இவை அனைத்தையும் நன்கு அறிவார்கள். நாமும் தமிழர் மரபுரிமை வாழ்வுரிமை இயக்கமும் இதனை சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். இதுவரை காலமும் எமது செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடையாக இருந்தது. இனிவரும் காலத்தில் எம்முடன் கைகோர்க்க விரும்பும் அனைத்து சக்திகளையும் இணைத்துக்கொண்டு எமது பணிகளை முன்னைவிட முனைப்புடன் முன்னெடுப்போம்.

அடுத்த ஐந்து வருடத்துக்கு தற்போதைய அரசாங்கமே ஆட்சியில் இருக்கும் என பேசப்பட்டு வரும் நிலைமையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவ்வாறு செயற்பட போகின்றீர்கள்?

யாருடைய அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது என்பது கேள்வியல்ல. யார் எம்தேசிய இனமும் இந்நாட்டின் சம உரிமையுடன் வாழ்வதற்கு உரித்துடையவர்கள் என்று நினைக்கின்றனரோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற நாம் தயார். அந்த அங்கீகாரத்தை ஏற்காதவரை எமது போராட்டமும் தொடரும். நாம் மேற்சொன்னபடி எமது நாடு பொருளாதாரரீதியில் அபிவிருத்தி அடைய வேண்டுமானால் எமக்குரிய அதிகாரம் வழங்கப்படவேண்டும். மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். இதற்கு சாக்குபோக்கு சொல்லும்வரை இந்தநாடு முன்னேறுவதற்கு இடமில்லை.

எமக்கான அதிகாரங்கள் வழங்கப்படுமாக இருந்தால் அடுத்த பத்தாண்டுகளில் நாட்டின் வளர்ச்சி வீதம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்திருக்கும். இதனையே நாம் சிங்கள மக்களிடமும் முன்வைக்கிறோம்.
அரசாங்கங்கள் கூறும் விடயங்கள் போலியானவை என்பதை வெளிப்படுத்தி சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒருவருக்கொருவர் எதிரிகள் இல்லை, எங்கள் மத்தியில் ஐக்கியம் இன்மைக்கு மாறிமாறி ஆட்சியில் அமரும் அரசாங்கங்களே காரணம், தமிழர்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட்டால் நாடு பிளவுபட்டுவிடாது, மாறாக முன்னேற்றமடையும் என்பதை உரத்த குரலில் இந்நாட்டு மக்கள் அனைவரும் சிங்கள ஆளும் வர்க்கத்தினருக்குப் புரிய வைக்க வேண்டும்.

வன்னி தேர்தல் நிலைமை குறித்து….?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஏமாற்று வேலைகளையும், அபிவிருத்தி குறித்துப் பிதற்றும் ஏனைய அரசாங்கத்தின் முகவர்களையும், வாக்குகளைச் சிதறடிப்பதற்காக ஆளும் வர்க்கங்களால் இறக்கிவிடப்பட்டுள்ள சுயேட்சைக்குழுக்களின் நோக்கங்களையும் செயற்பாட்டையும் எமது மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி வன்னி உட்பட வடக்கு-கிழக்கில் அதிக ஆசனங்களைப் பெற்று, தமிழ்த் தேசிய இனத்தின் புதிய அரசியல் சக்தியாக, மக்களை அரவணைக்கும் அமைப்பாக, அனைவரையம் உள்ளீர்த்துச் செயற்படும் கட்டமைப்பைக் கொண்ட வலுவான அரசியல் கட்சியாக எதிர்காலத்தில் பரிணமிக்கும்.

தேர்தல் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
இன்னமும் அபிவிருத்தி மாயையில் மயங்கி, சொந்தபந்தங்கள், தனிப்பட்ட முறையில் அவர் நல்லவர், நாளை அவர் முகத்தில் எப்படி முழிப்பது? என்பது போன்ற காரணங்களினால் ஏமாற்றுக்காரர்களுக்கும், கொள்கைப் பிடிப்பற்றவர்களுக்கும், அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவதற்கும் களமிறக்கப்பட்டவர்களுக்கும் உங்களது வாக்குகளை அளித்து தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலத்தைச் சிதறடித்துவிடாமல், எமது உரிமைகளை விலைபேசுவதற்காகவே பலர் திட்டமிட்டு களமிறங்கியுள்ளனர் இறக்கப்பட்டுள்ளனர் என்பதை நன்கு சிந்தித்து எமது உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணிக்கே உங்களது ஆதரவினை சிந்தாமல் சிதறாமல் மீன் சின்னத்திற்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

நேர்காணல் – ரொஷான் நாகலிங்கம்

நன்றி – தினக்குரல்